அமெரிக்க எம்.பி.க்களுடனான பேச்சுவார்த்தையை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரத்துசெய்தது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை திரும்பப் பெற வேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 11ஆம் தேதியிலிருந்து நடந்து வரும் போராட்டங்களில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்கள் காரணமாக 12 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். எனினும், போராட்டத்தின் தீவிரத்தை வலுவிழக்கச் செய்ய மத்திய அரசால் முடியவில்லை.
போராட்டங்களால் பல நாட்டு தலைவர்கள், அமைச்சர்களின் இந்திய வருகை ரத்துசெய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க எம்.பி.க்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்திருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
வாஷிங்டன்னில் இந்த வாரம் அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களுக்கான எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி பிரமிளா ஜெயபாலும் இடம்பெற்றிருந்தார். இவர் காஷ்மீருக்கான சட்டப் பிரிவு 370 ஐ நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அமெரிக்க கீழவையில் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான எம்.பி.க்கள் குழுவிலிருந்து பிரமிளா ஜெயபாலை நீக்க வேண்டும் என்று இந்தியா வைத்த கோரிக்கையை அமெரிக்க எம்.பி.க்கள் மறுத்துவிட்டதால், அந்தக் கூட்டத்தையே அமைச்சர் ஜெய்சங்கர் ரத்துசெய்துவிட்டார்.
எனினும், அமெரிக்க எம்.பி.க்களுடனான கூட்டம் ரத்துசெய்யப்பட்டது குறித்து மற்றொரு தகவலும் வந்துகொண்டிருக்கிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் வரும் நிலையில், இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட இந்திய ராணுவம், தனது நிலைகளைத் தயார்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நோக்கி முன்னேறியது. அங்கு எல்லைப் பகுதியில் இருக்கும் முள்வேலிகள், தடுப்புகளை அகற்றுவதைக் கண்காணித்த அமெரிக்கா, இந்தியாவை அழைத்து, ‘குடியுரிமை எதிர்ப்பு போராட்டங்களை சமாளிக்க, பாகிஸ்தானுக்கு எதிராக போருக்கு போவது சரியல்ல’ என்று கண்டித்திருக்கிறது. இந்த சூழலில்தான் அமெரிக்க எம்.பி.க்களுடனான பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்று பாஜக அமைச்சர்கள் வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 21) மத்திய அமைச்சர்களை அழைத்து அவரச ஆலோசனை மேற்கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நெருக்கடி உண்டாகியுள்ள நிலையில், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் விவாதித்திருக்கிறார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.�,