சுபமாக முடிந்தபோதும் புதுச்சேரி பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு இக்கட்டு ஏற்பட்டுள்ளது.
ரங்கசாமி தலைமையிலான புதுவை தே.ஜ.கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும் பா.ஜ.க.வுக்கு 10 இடங்களும் அ.தி.மு.க.வுக்கு 4 இடங்களும் பிரித்துக்கொள்ளப்பட்டன. பா.ம.க.வுக்கு ஒரு தொகுதியைத் தருவது என முன்னர் தீர்மானித்திருந்ததையும் மாற்றிக்கொண்டு, 10 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவது என பா.ஜ.க. திடீர் முடிவை எடுத்தது. அதன்படி வேட்பாளர் பட்டியலையும் தயார்செய்துவிட்டது.
அ.தி.மு.க.வுக்கு நான்கு இடங்கள்தான் தரமுடியும் என பா.ஜ.க. கூறியதை, அந்தக் கட்சியினரால் சுத்தமாக ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. வேறு வழியும் இல்லாமல் தவிக்கின்றனர். அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. பாஸ்கரன், தொடர்ந்து வெற்றிபெற்றுவரும் அன்பழகன் இருவரும் குமுறிவிட்டார்கள்.
“இப்போதே நாங்கள் நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். மொத்தமே 4 தொகுதிகளைத் தந்தால் எப்படி சரியாக இருக்கும்? “ என்று திகைத்துப்போனார்கள்.
அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் தொடர்புகொண்டு, நடக்கும் பிரச்னையை எடுத்துக்கூறி இருக்கின்றனர். ”இங்கே எங்களுக்கே ஏகப்பட்ட பிரச்னைகள், நெருக்கடி. எங்களால் சமாளிக்கமுடியவில்லை. முடிந்த அளவுக்கு சுமுகமாகப் போகப் பாருங்கள். அவர்களிடம் பேசிப்பாருங்கள்.” என சோகத்தோடு பதில் கிடைத்துள்ளது.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான அன்பழகன் மற்றும் சில நிர்வாகிகள் சேர்ந்து, பாஜக மேலிடப் பொறுப்பாளரான சுரானாவுடன் பேசினார்கள். ” பத்து இடங்களில் நாங்கள் போட்டியிட்டாக வேண்டும். எங்களை நம்பி காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்களை, கைவிடமுடியாது.” என உறுதியாக சொல்லிவிட்டார்.
இப்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க. நிர்வாகிகளில் பலவீனமாக இருப்பவர்களை பா.ஜ.க. தரப்பு சரிக்கட்டிவிட்டதாக தகவல்!
ஆனாலும் தொகுதிகள் தொடர்பாக சிறுசிறு பிரச்னைகள் இருப்பதால், வேட்பாளர்களை அறிவிப்பது தாமதமாகிறது என்று சொல்கிறார்கள். இதனால் அ.தி.மு.க.வினர் விரக்தி அடைந்துபோய்விட்டனர்.
பா.ஜ.க.வில் கல்யாணசுந்தரம், ஜான்குமார், சபாநாயகராக இருந்த சிவக்கொளுந்துவின் மகன் அல்லது தம்பி, நமச்சிவாயம், ஜான்குமாரின் மகன், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், சாய்சரவணன், தீபா ஜான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
– வணங்காமுடி
�,