விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்து அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்ற யூகம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையாகி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவுவதற்கும், விநாயகர் சிலை ஊர்வலம், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாமென்றும், வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும் தமிழக அரசு அறிவுறுத்தியது. பாஜக தலைவர் எல். முருகன் ஆகஸ்டு 17 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் முருகனுக்கு எவ்வித உறுதியும் கொடுக்காமல் அனுப்பி வைத்துவிட்டார் தமிழக முதல்வர்.
இந்நிலையில் இந்து அமைப்புகள் தடையை மீறி விநாயர் சிலைகளை பொது இடங்களில் நிறுவப் போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில், “தடையை மீறி விநாயகர் சிலையை வைத்து வழிபடுவோம் என்று கூறியதற்கு முக்கிய காரணமான இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன், தமிழகத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். விநாயகர் சதுர்த்தி குறித்த இன்னும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
“இது என்ன மதச்சார்பின்மை? முஸ்லீம்கள் ரம்ஜான் கொண்டாட மக்கள் (இந்துக்கள் உட்பட) வரிப்பணத்தில் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான டன்கள் அரிசி. ஆனால் இந்துக்கள் வீட்டில் கூட சதுர்த்தி கொண்டாட முடியாதபடி விநாயகர் சிலைகள் செய்யும் கூடங்களுக்கு காவல்துறை சீல் வைக்கிறது. விநாயகர் சிலைகளை வாகனங்களில் எடுத்துச் சென்றால் அவைகளை காவல்துறை சிறைபிடிக்கிறது. ஆனால் பக்ரீத் சமயத்தில் மாடுகள் டிரான்ஸ்போர்ட் செய்ததை தடுத்தார்களா என்றால் இல்லை. செக்யூலரிஸம் என்பதற்கு பொருள் இந்து விரோதம் என்பது தான். தமிழக அரசின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ள ஹெச்.ராஜா,
அடுத்த பதிவில், “கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை போட்ட தமிழக அரசை ஆண்மையற்ற அரசு என்று சொல்லாமல் சொல்கிறாரா ராஜா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே அதிமுகவினரை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி இதுபோன்ற வரம்பற்ற விமர்சனத்தை செய்தார். இப்போது தமிழக அரசையே வரம்பு மீறி விமர்சனம் செய்துள்ளார் ராஜா.
**-வேந்தன்**�,”