தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது இரண்டாவது வேளாண் பட்ஜெட்டை இன்று மார்ச் 19 சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு….
தமிழகத்தில் 10 இடங்களில் புதிய உழவர் சந்தைகள் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் சோயாபீன்ஸ் உற்பத்தி திட்டம் 1.2 கோடி ரூபாயில் தொடங்கப்படும்.
பனை மேம்பாட்டுக்காக இந்த வேளாண் பட்ஜெட்டில் 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பனை வளர்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் இந்த நிதி ஆண்டில் 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும். பனைமரம் ஏறும் எந்திரங்கள், பனைவெல்லம், கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களிலும் வாய்க்கால்களிலும் 80 கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட இந்த நிதியாண்டில் மின்வாரியத்திற்கு 5ஆயிரத்து 117 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சூரிய சக்தி பம்பு செட்டுகளை மானிய விலையில் வாங்குவதற்காக 65 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது.
பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் வகைகளை பிரபலப்படுத்த மாவட்டந்தோறும் பாரம்பரிய பயிர் கண்காட்சிகள் நடத்தப்படும்.
**வேந்தன்**