அக்னிபத் : சலுகைகள் அளித்தும் தணியாத போராட்டம்!

Published On:

| By admin

அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் வயது தளர்வு மற்றும் 10% இட ஒதுக்கீடு என சலுகைகளை அறிவித்து வந்தாலும், போராட்டம் தணியவில்லை. இந்த நிலையில் இன்று மத்திய அரசுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம், கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமல்லாமல், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியக் கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த 16 பொதுத்துறை நிறுவனங்களில் அக்னிவீரர்களுக்கு10% இட ஒதுக்கீடு வழங்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்தார். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம்(HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (BEL) உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும். முன்னதாக அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பை மத்திய அரசு 23ஆகவும் தளர்த்தியது.

மத்திய அரசு சார்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இளைஞர்களுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளனர்.

ஜூன் 19 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் காலை 10 மணிக்குத் தொடங்கும் போராட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ விவசாயிகளின் வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் என்று கூறியிருந்தேன். அதுபோன்று திரும்ப பெறப்பட்டது. தற்போது இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பால் இந்த திட்டமும் திரும்பப் பெறப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel