அக்னிபத்: மூன்று நாட்களில் 56,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

Published On:

| By admin

கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று மத்திய அரசு 17 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு ராணுவப் படைகளில் சேர அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கடுமையான வன்முறைகளும் போராட்டங்களும் எழுந்தன. இந்தத் திட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தின.
இதனால் கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கு அதிகபட்ச வயது வரம்பை 21இல் இருந்து 23 ஆக உயர்த்தியது. இந்தத் திட்டம் மூலம் ராணுவ படைகளில் இந்திய இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றலாம், பின்னர் 25 சதவிகிதம் பேருக்கு நிரந்தர பணிகள் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதால் இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் அவர்கள் ஓய்வு பெற்றவுடன் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களில் அவர்களுக்கு முன்னுரிமை போன்ற பல தளர்வு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இந்திய விமானப்படை ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் நேற்று வரை 56,960 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய அக்னிபாத் விண்ணப்பக் காலம் ஜூலை 5ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் மூன்றே நாட்களில் 56,000க்கும் மேல் விண்ணப்பங்கள் வந்துள்ளது.
இந்த நிலையில் அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக வன்முறை, போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று ஆயுதப்படை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel