ரயில்களைச் சேதப்படுத்த வேண்டாம்: ரயில்வே அமைச்சர்!

politics

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்த வேண்டாம் என்று ரயில்வே துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்காண்டுக் காலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் சேருவதற்கான மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தரப் பிரதேசம், அரியானா தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைப்பு கல்வீசி தாக்குதல் என போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதனால் பீகாரில் இணைய மற்றும் எஸ்எம்எஸ் சேவையை முடக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இளைஞர்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வே தரப்பில், இதுவரை 140 பயணிகள் ரயில்கள், 94 விரைவு ரயில்கள் என 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 340 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக 7க்கும் மேற்பட்ட ரயில்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரயில்வே துறையின் சொத்துக்களைச் சேதப்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *