கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இனி நேரடி விசாரணை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தெரிவித்தார். டெல்டாவும், ஒமிக்ரான் வைரஸும் இணைந்து மூன்றாம் அலையாகப் பரவி வருவதாகவும், இது சுனாமி போல் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நீதிமன்றங்களில் மீண்டும் நேரடியாக அல்லாமல் ஆன்லைன் மூலம் மட்டும் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் உச்சநீதிமன்ற பதிவாளர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜனவரி 3) முதல் காணொலிக் காட்சி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நேரடி விசாரணை கிடையாது மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவருக்கும் அவரது கணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
**-பிரியா**
�,