இந்தியாவில் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 1.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தது முதல் தினசரி கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி 5,784 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, டிசம்பர் 16ஆம் தேதி 6,984 ஆக அதிகரித்தது. இப்படி தொடர்ந்து அதிகரித்து டிசம்பர் 30ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. ஒமிக்ரான் பரவ ஆரம்பித்து 36 நாட்கள் ஆன நிலையில், ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,17,700 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நேற்றைய பாதிப்பை விட 28 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா உறுதியாகும் விகிதம் 7.74 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் முதல் அலையின்போது தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆக அதிகரிப்பதற்கு 103 நாட்கள் ஆனது. இரண்டாவது அலையில் 43 நாட்களில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது. தற்போது மூன்றாவது அலையாக கருதப்படும் ஒமிக்ரான் பரவல் காரணமாக நாட்டில் 8 நாட்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஒமிக்ரான் பரவல் எந்த வேகத்தில் இருக்கிறது என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.
அதுபோன்று ஒரேநாளில் 377 பேருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டு, நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் 27 மாநிலங்களில் பரவியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 876 பேரும், டெல்லியில் 465 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோன்று தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 600க்கு கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 6983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 121 பேர் ஒமிக்ரானால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
**சாதாரணமாக நினைக்கக் கூடாது**
உலக நாடுகளில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரானை இலேசாக நாம் நினைக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், அதை லேசானது என வகைப்படுத்துவது அர்த்தமற்ற செயல். முந்தைய வகை கொரோனா போன்றே ஒமிக்ரானும் அதிகளவிலான மக்களை மருத்துவமனையில் அனுமதிக்க வைக்கிறது, உயிரிழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சுனாமி போன்று பரவி வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள சுகாதார கட்டமைப்பு மீது நெருக்கடியை உண்டு பண்ணுகிறது. அதனால் மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை கவனமாகவும், தவறாமலும் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,