சசிகலாவின் சகோதரரும் சில ஆண்டுகள் முன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியவருமான திவாகரன் , இன்று (ஜூலை 12) தஞ்சையில் சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் தனது கட்சியை இணைத்தார்.
இந்த விழாவில் பேசிய சசிகலா, “பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் நன்றாக கற்று வைத்திருக்கிறேன். அதிமுகவை ஒற்றுமைப்படுத்தி ஒருங்கிணைத்துச் செல்வதையே என் எஞ்சிய வாழ்நாளின் இலட்சியமாக கருதுகிறேன்.அதிமுகவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்து கழக ஆட்சியை அரியணையில் ஏற்றுவதுதான் என் குறிக்கோள். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே குடையில் கொண்டுவந்து அதிமுகதான் வலிமையான கட்சி என்ற நிலையை அடையும் பணியை மேற்கொண்டு வருகிறேன்.
பெங்களூருவில் இருந்து வந்த நாள் முதல் இன்று வரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்லி வருகிறேன். நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று இருப்பவள் அல்ல நான்.அதன் தொடக்கமாகத்தான் சகோதரர் திவாகரன் தலைமையில் அண்ணா திராவிடர் கழகத்தினர் என் தலைமையில் தாய்க்கழகமான அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
இதேபோன்று இன்னமும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரத்தத்தின் ரத்தங்களையும், சிங்கங்களையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கும் வரை நான் ஓய மாட்டேன். இதுதான் எம்ஜிஆர், அம்மாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.
நாமெல்லாம் நன்றிக்காகவும் விசுவாசத்துக்காகவும் இருப்பவர்கள். அம்மாவை கண்ணின் இமை போல காத்திருந்தவர்கள் நாம். எனவே அதிமுகவை காப்பாற்றுவதற்கும் நமது பங்கு அவசியமாக இருக்கிறது. அனைவரும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக நின்றால்தான் எதிரிகளின் கனவு கனவாகவே போகும்.எம்.ஜி.ஆர்., எவ்வித சாதி பேதமும் இன்றி இந்த இயக்கத்தை உருவாக்கினார். அம்மாவும் அதே வழியில் அனைவரையும் அரவணைத்தார். தற்போது நானும் இதே வழியில்தான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா?
தங்களுக்கு கிடைக்கின்ற ஆதாயத்துக்காக நான் பெரியவன், நீ பெரியவன் என்று போட்டி போட்டுக்கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்? இதனால் பாதிக்கப்படுவது அப்பாவித் தொண்டன்” என்ற சசிகலா தற்போது அதிமுகவில் நடந்துகொண்டிருக்கும் பொதுக்குழு சர்ச்சைக்கு வந்தார்.
“அம்மா மறைவுக்குப் பின் 2016 ஆம் டிசம்பர் வரை நடந்த பொதுக்குழுக்கள்தான் உண்மையான பொதுக்குழுக்கள். அவைதான் கழக சட்ட திட்ட விதிகளின்படி நடந்த உண்மையான பொதுக்குழுக்கள். அதன் பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழுக்கள் அனைத்தையும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்,.
இதுபோல் ஆண்டுக்கு ஒருமுறை சட்ட திட்ட விதிகளை யாருமே மாற்றியதில்லை. இவர்கள் செய்வது சட்டப்படி செல்லாது. விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அப்படியே விட்டுவிட முடியாது. இதற்காகவா இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டோம்,
எத்தனையோ துரோகங்களை வென்றெடுத்த இந்த இயக்கம், இப்போதைய சூழ்ச்சி வலையில் இருந்தும் விடுபடும். கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள். உங்கள் சகோதரியாக தாயாக சொல்கிறேன்… ‘எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சித் தலைவரையும், அம்மாவையும் பார்த்துப் பார்த்து வளர்ந்த வீரத் தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கும் வரை யாரும் இந்த இயக்கத்தை அபகரித்துவிட முடியது. மீண்டும் இந்த இயக்கம் ஜாதி மத பேதமில்லாமல் வேண்டியவர் வேண்டாதவர் பேதமில்லாமல் மிடுக்கோடு நடைபோடும்” என்று பேசினார் சசிகலா.
–வேந்தன்