இலவச மின்சாரம் ரத்து: பிரதமருக்கு முதல்வர் எதிர்ப்பு!

Published On:

| By Balaji

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5 நாட்களாக அறிவித்தார். இவை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வகையிலும் நிவாரணத்தை அளிக்கவில்லை என்றும், கடன்களை மட்டுமே வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 18) எழுதியுள்ள கடிதத்தில், பொருளாதாரத் தொகுப்பு மற்றும் மத்திய அரசின் சில அறிவிப்புகள் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

பொருளாதார நிதித் தொகுப்பை அறிவித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதன் மூலம் பொருளாதாரம் மறுமலர்ச்சியை சந்திக்கும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி, மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று நோய் தடுப்பு மையங்கள், வட்டார அளவில் பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் அதில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளதாகக் கூறினார்.

மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வரம்பு உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர், “கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மாநிலங்களில் வருவாய் பெருமளவில் பற்றாக்குறையை சந்தித்துள்ளன. கொரோனா தடுப்புச் செலவுகள் மட்டுமின்றி மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவீனங்களும் உள்ளன. ஆகவே, பெறப்படும் மாநில அரசின் கடன், மாநிலங்களின் எதிர்கால வரி வருவாயிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். கூடுதல் கடன் தேவைகளுக்கு தேவையற்ற நிபந்தனைகளை இணைப்பது நியாயமற்றதாகத் தெரிகிறது. இதுபற்றி மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மத்திய அரசிடமிருந்து எந்தவொரு நிதியையும் எதிர்பார்க்காமல் 4 முக்கிய துறைகளில் தமிழக அரசு சீர்த்திருத்தங்களை செய்துள்ளதாகக் குறிப்பிட்ட முதல்வர், “குறிப்பாக மின் விநியோகத்தில் செய்துள்ள சீர்திருத்தங்கள், அரசியல் ரீதியாக முக்கியமானவை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மேலும், மானியம் வழங்குவதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யும் யோசனையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது எங்களுடைய நிலைப்பாடு என்பதால் மானியம் வழங்கும் விவகாரத்தை மாநில அரசுகளிடமே ஒப்படைத்து விட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை புரிந்துகொண்டு உரிய வழிகாட்டுதல்களில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share