ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் எனக்கூறி, அவர்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்துவருகிறது.
இது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான கண்ணோட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல்சாசனத்தின் முகாந்திரப்படி, சமூகரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் கருத்து.
இதற்கு முன்னரே, அகில இந்திய அளவில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பயனடைவதற்கு, ஆண்டு வருமானம் 8 இலட்சம் ரூபாய் உள்ள குடும்பத்தினருக்கு தகுதி இல்லை என்பது விதியாக உள்ளது. ஆனால் அதே வருமானத்தை ஈட்டுபவர்கள், மத்திய அரசின் புதிய ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெறமுடியும்.
இந்த முரண்பாட்டைக் களையவேண்டும் என நாடு முழுவதும் தொடர் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்றமும் அதிர்ச்சியோடு இதைப் பற்றி கருத்துத் தெரிவித்ததுடன், பிற பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கான வருமான வரம்பை, ஏழைகளுக்கான அதிகபட்ச வருமான வரம்பாகக் கொள்ளமுடியும்? இது முரண்பாடாக இல்லையா என கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து பதில்மனு தாக்கல்செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, இதில் அரசுக்கு ஆலோசனைகூற நிதித் துறை முன்னாள் செயலர் அஜய் பூஷண் பாண்டே, ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். எனப்படும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு உறுப்பினர் செயலர் வி.கே. மல்கோத்ரா, மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் டிச. 31 அன்று அரசிடம் தங்கள் அறிக்கையை அளித்தனர்.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் மைய அரசு நேற்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல்செய்தது.
ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆண்டு வருவான வரம்பு 8 இலட்சம் ரூபாயாகவே தொடர அதில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குடும்பத்தின் மொத்த வருமானம் 8 இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலும், 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் வைத்திருந்தால், ஏழைகளாகக் கருதப்படமாட்டார்கள்.
அதேநேரம், குறிப்பிட்ட பரப்பளவுக்குமேல் கட்டப்பட்ட வீட்டின் அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை என்கிற விதியை நீக்க இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
**- முருகு**
�,