|ரூ.10,000 கோடி நிதி எங்கிருந்து வருகிறது? ஸ்டாலின்

Published On:

| By Balaji

மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை ரத்துசெய்யக்கூடாது என முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப் பணியில் சேர்ந்த மருத்துவர்களுக்கு முறையே 8, 15, 17, 20 ஆவது ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று 2009 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் தங்களுக்கும் அதே போன்று பதவி உயர்வு, ஓய்வூதியம் வழங்க வேண்டுமென சட்டப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக நிதித்துறை கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஆணையிட்டது.

இதன்மூலம் 2009ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசின் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக இன்று (ஜூலை 10) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “நிதி நிலைமையைக் காரணம் காட்டி, முதல்வரை முன்நிறுத்தும் விளம்பரங்களையோ – அவசியமில்லாமல் கமிஷனுக்காக அவசரப்படுத்தப்படும் டெண்டர்களுக்கோ நிதி ஒதுக்குவதைத் தள்ளி வைக்க முடியாத ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள நிதித்துறை, ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை மட்டும் ரத்து செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று சாடியுள்ளார்.

அரசு ஊழியர்களான மருத்துவர்களுக்கு அநீதியையும் அமைச்சர்கள் கமிஷனுக்காகவே விடும் டெண்டர்களுக்கு நிதியையும் அளிப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த ஸ்டாலின், “கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் முன்னணிக் கள வீரர்களில் முக்கியமாக இருக்கிறார்கள். இதுபோல்தான் ஓய்வு பெற்ற மருத்துவர்களும் தமிழக மக்களுக்காகத் தன்னலமற்று பணியாற்றியவர்கள். அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை இப்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது என்றால், டெண்டர்களுக்கு 1000 கோடி, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்று அனுமதியளிப்பதற்கு எங்கிருந்து நிதி வருகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “மக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது மாபாதகச் செயல் 23.10.2009-க்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share