அதிமுக யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 9 மாதங்களே மீதமுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.
சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதல்வரைத் தேர்ந்தெடுப்போம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவிக்க, “எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்” எனவும், இதனை இலக்காக நிர்ணயித்து தேர்தலை சந்திப்போம் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது விவாதத்தை கூர்மையாக்கியது.
இந்த நிலையில் மதுரையில் இன்று (ஆகஸ்ட் 12) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழும் ஓ பன்னீர் செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும். பொருளாதார வளர்ச்சியிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் முதன்மை மாநிலம் என்ற பெயரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாங்கிக்கொடுத்துள்ளார். இவ்வாறு திட்டங்களை செயல்படுத்துவதில் வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமி, அவருக்கு துணை நிற்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிறுத்திதான் மக்களவைத் தேர்தல் மற்றும் மினி சட்டமன்றத் தேர்தல் எனக் கருதப்பட்ட இடைத் தேர்தலையும் சந்தித்தோம். உள்ளாட்சித் தேர்தலிலும் இருவரையும் முன்னிறுத்தி சந்தித்தோம்” என்று தெரிவித்தார்.
இந்த ஒற்றுமையைத்தான் மக்கள் விரும்புவதாகவும், ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்கும்போது வெற்றி மேல் வெற்றி கிடைத்திருக்கிறது எனவும் குறிப்பிட்ட உதயகுமார், “ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் போட்ட மந்திரங்கள் எதுவும் பலிக்கவில்லை. இந்த அரசு பிழைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது நிலையான அரசு செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல்களை போலவே எதிர்வரும் தேர்தல்களையும் இருவரையும் முன்னிறுத்தியே எதிர்கொள்வோம்” என்றும் குறிப்பிட்டார்.
**எழில்**�,”