�பங்கைக் கொடுக்காவிட்டால் நாசமாய்ப் போகும்: அதிமுகவை எச்சரிக்கும் ராமதாஸ்

Published On:

| By Balaji

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் நேற்று ( ஜனவரி 11) தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இரண்டாம் கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதில் தேர்தல் கூட்டணி பற்றியும், வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றியும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அதை மறுத்துள்ளார்.

“ தமிழக அமைச்சர்கள் திரு. பி.தங்கமணி, திரு.எஸ்.பி. வேலுமணி ஆகியோர் என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்

அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் ஜனவரி 11 ஆம் தேதி மாலை தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

மேலும், டாக்டர் ராமதாஸ் தனது ஃபேஸ்புக் பதிவில், “இது ஆட்சியாளர்களுக்கு சமர்ப்பணம்; பெரியார் சொல்வதையாவது கேளுங்கள்!”என்ற தலைப்பில் இன்னொரு கருத்தையும் கூறியுள்ளார்.

எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு – அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்? தன்னுடைய பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்”என்று குடியரசு பத்திரிகை தலையங்கத்தில் (08.11.1931) பெரியார் எழுதியதை எடுத்து மேற்கோள்காட்டியிருக்கிறார் ராமதாஸ்.

இதன் மூலம் அமைச்சர்களுடனான சந்திப்பில் வன்னியர் உள் ஒதுக்கீட்டில் அரசுக்கு இருக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறியதும் இது தொடர்பாக ராமதாஸுக்கும் அதிமுக அரசுக்கும் இடையில் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு வரவில்லை என்பதும் தெரியவருகிறது.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share