நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியினரிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அக்கட்சித் தலைமை.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வரும் நிலையில், திமுக சார்பில் ஒரு மாதம் முன்பே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வேட்பாளர்களுக்கான நேர்காணலும் நடைபெற்றது. திமுகவைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கின.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 21) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
“ஒரு சில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், ஒரு சில பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், அத்தகைய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில், மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.5 ஆயிரமும், நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், கட்சியின் தலைமைக்கழகத்தில் இருந்து அதற்கான விருப்பமனுக்கள் மற்றும் ரசீது புத்தகங்களை பெற்றுச்சென்று, அது சம்பந்தமான விவரங்களை கட்சியினர் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்பமனுக்களைப் பெறவேண்டும்.
தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்புக்கோரி மனு அளிப்பவர்களுக்கு மட்டுமே, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
**-வேந்தன்**
�,