அதிமுக வழிகாட்டும் குழு: அரசியல், சமூக ரீதியான பிரதிநிதித்துவம் என்ன?

Published On:

| By Balaji

அதிமுகவுக்கென புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 7) வெளியிட்டிருக்கிறார்.

பன்னீர், எடப்பாடி அணிகள் இணைந்து பொதுக்குழுவை 2017 இல் கூட்டியபோதே வழிகாட்டும் குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போதைக்கு அது கிடப்பில் போடப்பட்ட நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி செயற்குழுக் கூட்டத்தில் மீண்டும் இப்பிரச்சினையை கிளப்பினார் பன்னீர் செல்வம்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒருமித்த முடிவெடுக்கப்பட்டு அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதன்படி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சிவி. சண்முகம், ஆர்.காமராஜ் ஆகியோரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா. மோகன், மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் ஆகியோர் வழிகாட்டும் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்படுகிறவர்கள். சி.வி. சண்முகம் எந்தப் பக்கமும் சாராதவராக அறியப்பட்டவர். அதேபோல ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.மாணிக்கம் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக அறியப்படுகிறார்கள்.

நம்மிடம் பேசிய அதிமுக பிரமுகர்கள், “திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சி.வி. சண்முகம் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஜே.சி,டி. பிரபாகர் கிறிஸ்துவ வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். மனோஜ் பாண்டியன் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர். பா. மோகன் நடுநாட்டு வேளாளர் பிள்ளை சமுதாயத்தைச் சேர்ந்தவர். கோபாலகிருஷ்ணன் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர் மீனவர் சமூகத்தின் சார்பில் ஜெயக்குமாரும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பில் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கமும் வழிகாட்டும் குழுவில் இடம்பிடித்துள்ளார்கள். இவ்வாறு சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் மதிப்பளிக்கப்பட்டு பிரநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

வழிகாட்டும் குழுவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடமில்லை. **பொதுச் செயலாளராக ஜெயலலிதா தலைமை வகித்த அதிமுகவின் வழிகாட்டும் குழுவில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை**.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share