அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவதற்கான காரணங்களில் பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டதும் ஒன்று.
இந்த வழிகாட்டும் குழுவில் இடம்பெறுவதற்கு அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களிடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் 11 பேர்தான் இடம்பெற வேண்டும் என்பதால் இதில் பலருக்கும் வாய்ப்பு கிட்டாமல் போனது. இந்த இழுபறிதான் அக்டோபர் 7 ஆம் தேதி அதிகாலை 3.30 வரை நீடித்தது.
இந்த நிலையில் அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவில் அதிமுகவிலிருந்து வேறு கட்சிக்கு சென்று வந்தவர்கள் எப்படி இடம் பிடிக்க முடியும் என்று தலைமைக் கழகத்துக்கு புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன.
வழிகாட்டும் குழுவில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர் மீது தான் இந்த புகார்கள் அதிமுக தலைமைக் கழகத்திற்கும் பன்னீர்செல்வத்துக்கும் சென்று கொண்டிருக்கின்றன.
ஜேசிடி பிரபாகர் எம்ஜிஆர் காலத்து அதிமுக காரர் என்றாலும் 96 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்றார் பிரபாகர். அங்கே மூப்பனாருக்கு தனிச் செயலாளராக இருந்தவர் மூப்பனார் காலமான பிறகு அதிமுகவுக்கு திரும்பிவிட்டார். இப்படி வேறு கட்சிக்கு சென்று வந்தவரை அதிமுகவின் உயர்ந்த குழுவான வழிகாட்டும் குழுவுக்கு எப்படி நியமிக்க முடியும். ஓ.பன்னீரின் சிபாரிசு மட்டும் போதுமா?” என்று அந்த புகாரை அனுப்பியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுபற்றி நாம் ஜேசிடி பிரபாகர் தரப்பில் விசாரித்தபோது… “96 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து தமாகாவுக்கு பிரபாகர் சென்றது உண்மைதான். மீண்டும் அதிமுக வந்ததும் ஜெயலலிதா சிட்கோ சேர்மன் பதவியை பிரபாகருக்கு வழங்கினார். மேலும் 2011 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் எம்எல்ஏ வாகவும் பிரபாகர் இருந்தார். 2016இல் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட பிரபாகருக்கு வாய்ப்பளித்ததும் ஜெயலலிதா தான். எனவே இவ்வளவு பதவிகள், தகுதிகள் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டவருக்கு வழிகாட்டு குழுவில் இடம் அளித்தது தவறு இல்லை.
மேலும் 2001 ஆம் ஆண்டு அதிமுக வுடன் காங்கிரஸ் தமாகா கூட்டணி அமைக்கப் பட்டு அந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர் ஜேசிடி பிரபாகர். எனவே இடையில் வெளியே சென்றார் என்ற காரணங்களை வைத்து அவரது கட்சி தகுதியை புறக்கணித்துவிட முடியாது” என்கிறார்கள்.
**-ஆரா**
�,”