ஜெயலலிதா இல்லை; சசிகலாவுக்கும் தினகரனுக்கும் கட்சியில் இடமில்லை; ஆனாலும் அதிமுக ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுவிடுமென்று அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். செய்திருக்கும் திட்டங்கள், கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடியார் கட்டிக்காத்த விதம், இரட்டை இலைச் சின்னம் இவற்றையெல்லாம் தாண்டி எப்படியும் ஜெயிப்போம் என்று அவர்கள் நம்புவதற்கான ஒரே காரணம், பணம்.
இதே பணம்தான், 2016 தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றிபெறுமென்று கணிக்கப்பட்ட பல தொகுதிகளில் வெற்றியை திசை மாற்றிவிட்ட கருவி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இதே பணம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வியூகத்தையும் கூட்டணியையும் மாற்றுவதையும் தாண்டி பணப்பட்டுவாடா செய்யும் முறையை மாற்ற வேண்டுமென்று அதிமுக தலைமை தெளிவாக திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே பல மாவட்டங்களில் பூத்லெவல் கமிட்டிகளை அமைத்து ஒவ்வொரு கமிட்டிக்கும் நூறு பேர் வீதம் தேர்ந்தெடுத்து, கடந்த பல மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் தரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இரண்டு வாக்குகளை அதிமுகவுக்கு உறுதி செய்ய வேண்டுமென்பதுதான் அவர்களுக்கான பணி என்று கூறப்பட்டது. ஆனாலும் கட்சியிலுள்ள ஆண்களை நம்புவதை விட, கட்சியில் இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தால் சரியாக வாக்காளர்களுக்குப் பணம் சென்று விடுமென்று கணக்குப் போட்டு வேலையைத் துவக்கியுள்ளது அதிமுக.
வழக்கம்போல இதிலும் கொங்கு மண்டலம்தான் முன்னோடியாக இருந்தாலும் மாநிலம் முழுவதுமே இந்த வேலைகள் சத்தமின்றி ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மகளிர் அணியினரை வைத்து இந்த பணப்பட்டுவாடா மிக விரைவில் துவங்குமென்று நமக்குக் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி கொங்கு மண்டலத்தில் அதிமுக மகளிரணி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது நம்மிடம் அவர்கள் உற்சாகமாகப் பகிர்ந்த தகவல்கள்…
‘‘போன எம்பி எலக்சன்லயும் இதே போலத்தான் பூத் கமிட்டி அமைச்சுத்தான் எல்லோருக்கும் பணம் கொடுத்தாங்களாம். ஆனா ஊராட்சி செயலாளர், வார்டு செயலாளர்கள் மூலமா கொடுத்த பணம் எதுவும் சரியா போய்ச்சேரலையாம். அதனாலதான் கட்சி அநியாயமா தோற்றுப்போயிருச்சாம். இப்போ எங்களை நம்பி பணம் கொடுக்குறதா கட்சித்தலைமையில முடிவு பண்ணிருக்காங்க. இப்போ ஒவ்வொரு பூத்துக்கும் 79 பேர் கொண்ட கமிட்டி அமைச்சிருக்காங்க. அதுல 10 பேர் மகளிரணியில இருந்தும், 10 பேர் இளம்பெண்கள் பாசறையிலிருந்தும் எடுத்திருக்காங்க. எங்களுடைய பெயர், முகவரி, போன் நம்பர், போட்டோ எல்லாத்தையும் வாங்கிருக்காங்க. அதை தலைமைக்கு அனுப்பிருக்காங்களாம்.
ஒவ்வொரு மகளிரும் குறைந்தபட்சம் 50லிருந்து 100 பேர் வரைக்கும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்குற பொறுப்பு கொடுக்கப்போறதாச் சொல்றாங்க. அப்படிக் கொடுத்தா பூத்துக்கு எப்படியும் 500லிருந்து 1000 ஓட்டு வரைக்கும் வாங்கிடலாம்னு எங்க கட்சியில கணக்குப் போட்ருக்காங்க. எங்களை நம்பிக் கொடுத்தா நாங்க நிச்சயமா ஏமாத்த மாட்டோம்னு தெரியும். கொடுக்குற காசுக்கு ஓட்டை வாங்கிக் கொடுத்துருவோம். அதனால கண்டிப்பா கொடுப்பாங்கன்னுதான் நினைக்கிறோம்.’’ என்று நம்பிக்கையோடு சொன்னார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைவதற்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரமும் ஒரு பிரதானக் காரணமாக இருந்தது. அது கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி கொங்கு மண்டலத்திலும், இன்னும் பிற பகுதிகளிலும் கூட எதிரொலித்தது. சமீபத்தில் அதே வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது, அணைக்கப்பட்டிருந்த அந்த நெருப்பை மீண்டும் பற்ற வைத்து விட்டதாக அதிமுகவினர் கருதுகின்றனர். அதைச் சரிக்கட்டுவதற்கு பல விதமான யுக்திகளையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவைக்குச் சென்றிருந்தபோது, திமுகவினரால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் பேசினார். அவருடைய கூட்டத்திற்கும் பெண்களே அதிகளவில் திரட்டப்பட்டிருந்தனர். பேட்ஜ் குத்தி கொடியேந்தி வரும் பெண்களுக்கு 250 ரூபாய், சீருடை சேலையுடன் வருபவர்களுக்கு சேலையுடன் 300 ரூபாய், முளைப்பாரி கொண்டு வந்து வரவேற்றால் 500 ரூபாய் என்று பெண்களுக்கு பணம் வாரி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, பணப்பட்டுவாடாவை பெண்களை வைத்து செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆனால் கொங்கு மண்டலத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே இந்த 20/79 கணக்கில் ‘கேஷ் டீலிங் டீம்’க்கு மகளிரணியினரை தேர்வு செய்யும் வேலைகள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. தென் மாவட்டங்களில் மகளிரணியின் அணுகுமுறையும், வியூகமும் வேறு விதமாய் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். அங்கு சிறு நிதி நிறுவனங்களில் அதீத வட்டிக்குக் கடன் வாங்கியுள்ள பல ஆயிரம் மகளிர் குழுக்களைக் குறி வைத்து, அவர்களிடம் பட்டியலை வாங்கி, அந்த வாக்குகளைக் கவரவும் மகளிரணியினரை வைத்து கணக்கெடுப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள்.
திமுகவினருக்கு இந்த விபரம் தெரிய ஆரம்பித்து, பெண்களிடம் எதிர் பரப்புரையைத் துவக்கவும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்…
‘‘அதிமுக மகளிரணியினரை வைத்து, தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடா செய்வதற்காக பூத்வாரியாக ஒரு டீமை ரெடி செய்கிறார்கள் என்று எங்களுக்கும் தகவல் கிடைத்தது. ஆண் நிர்வாகிகளிடம் பணம் கொடுத்தால் அது முழுதாகப் போய்ச் சேரவில்லை என்றுதான் இப்படிச் செய்கிறார்கள். இது அவர்களின் கட்சிக்காரர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் பரப்புரை செய்யப்போவது திமுக ஆட்சிக்காலத்தில் மகளிர் குழுக்கள் எப்படியிருந்தன, இப்போது எப்படியிருக்கின்றன என்பது பற்றித்தான்.
திமுக ஆட்சிக்காலத்தில், மகளிர் குழுக்களுக்கு வங்கிக்கடன்கள் வாரி வழங்கப்பட்டன. சிறு வணிக வளாகங்கள் கட்டிக்கொடுத்தார்கள். அப்போது ஜோராக நடந்து கொண்டிருந்த பல வளாகங்களை இப்போது வேண்டுமென்றே மூடி வைத்திருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் கேண்டீன் நடத்த அனுமதி கொடுத்தார்கள். இப்போது அதையும் கட்சிக்காரர்களுக்குப் பறித்துக்கொடுத்துவிட்டார்கள், மகளிர் குழு கூட்டமைப்புகளுக்கு சின்னச்சின்ன காண்ட்ராக்ட்களைக் கொடுத்து வந்தார்கள். இன்றைக்கு சின்ன காண்ட்ராக்ட் துவங்கி பெரிய காண்ட்ராக்ட் வரைக்கும் அமைச்சர்களின் பினாமிகளுக்கு மட்டும்தான் தரப்படுகிறது. இதனால்தான் மைக்ரோ பைனான்ஸ்கள் பெருகிவிட்டன. கிராமத்துக்குக் கிராமம் அடகுக்கடைகள்தான் முளைத்து விட்டன. அதிமுகவினரைத் தவிர வேறு யாரிடமும் பணம் புழங்குவதே இல்லை. இதையெல்லாம்தான் பெண்களிடம் சொல்லப்போகிறோம்.!’’ என்றார் ஆவேசமாக.
ஏற்கெனவே தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டிவிட்டது. ஆண் வாக்காளர்களை விட 10 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள் அதிகமிருக்கின்றனர். எண்ணிக்கையில் மட்டுமில்லை; யாருக்கு எண்ணிக் கொடுப்பது என்பதிலும் பெண்களின் கைகளே ஓங்கப்போகிறது. ஆனாலும் என்ன…பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கூட இதில் தர முடியாமல் அரசியல் கட்சிகளில் ஆணாதிக்கம் நீடிப்பதை எல்லோரும் மனதார ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டுமென்று பாடினான் பாரதி. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவும் ஒரு சரித்திரமாகப் பதிவு செய்யப்படலாம்!.
**–பாலசிங்கம்**�,