அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

Published On:

| By Balaji

அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி இன்று (அக்டோபர் 17) ஓபிஎஸ், இபிஎஸ் ஒருபக்கமும், சசிகலா இன்னொரு பக்கமும் என்று இரு வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

முன்கூட்டியே நேற்று (அக்டோபர் 16) மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அலைபேசி உரையாடல்களில் தொண்டர்களிடம் பேசியது போல நேரடியாக ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அவரோ, “ என் மன பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்துவிட்டேன். இனி தலைவரும், அம்மாவும் காப்பாற்றுவார்கள்” என்று சுற்றி வளைத்தே பேசினார். இதுவே நேற்று சசிகலா ஆதரவாளர்களுக்கு எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை.

இந்த நிலையில் இன்று தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றிய சசிகலா அதன் பின் அங்கே ஒரு கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் என்றே பொறித்துள்ளனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு ராமாவரம் தோட்டத்துக்கு சென்ற சசிகலா அங்கே எம்.ஜி.ஆரின் இல்லத்தில் அதிமுக பொன் விழா மலரை வெளியிட்டார். இவ்வாறு அதிமுக கொடி கட்டிய கார், அதிமுக கொடிகளுடன் தொண்டர்கள், அதிமுக பொதுச் செயலாளர் என கல்வெட்டு, பொன்விழா மலர் என்று சசிகலா இன்று தீவிரமாக இயங்கி வரும்நிலையில்…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 17) அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பாஜக சசிகலாவை எவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் அண்ணாமலை.

“பொன்மனச் செம்மல் உருவாக்கிய அதிமுக பொன்விழாவை தொடங்கும் நாள் இன்று. தொண்டர்கள் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் நம்பி 1972ல் தொடக்கம். 1997-ல் நெல்லையில் புரட்சித்தலைவி அமைத்த வெள்ளி விழா. சிறப்பு அழைப்பாளராக பாஜகவின் தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி அய்யா அவர்கள்!

அந்த இரு தலைவர்களின் இருக்கும் பிம்பங்களாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கண்களைப் போல கழகத்தை காக்க, பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

2016 இல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர் செல்வம் தான் மேற்கொண்ட தர்மயுத்தம் பாஜகவின் சொற்படிதான் என்பதை அவரே சொல்லியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தியும் இதுகுறித்து வெளிப்படுத்தியுள்ளார். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஜனவரி மாதம் மோடியை சந்தித்துவிட்டு வெளியே வந்துதான் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அதிமுகவுக்குள் சசிகலாவை கொண்டுவர இன்னமும் பாஜக விரும்பவில்லை என்பதையே அண்னாமலையின் இந்த பொன் விழா மெசேஜ் காட்டுகிறது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share