அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு வழங்கப்பட்டதில், இன்னொரு கூட்டணிக் கட்சியான தேமுதிக அதிருப்தியடைந்துள்ளது.
ராஜ்யசபாவுக்கு 6 உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற நிலையில், கடந்த ஒரு மாதமாகவே அதிமுகவிடம் சீட் கேட்டு தேமுதிக, ஊடகங்கள் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்திவந்தது. மக்களவைத் தேர்தலின்போதே ராஜ்யசபா சீட் குறித்து பேசப்பட்டதாகவும், அதிமுக வாக்குறுதியை நிறைவேற்றும் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார். அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்து ராஜ்யசபா சீட் கேட்டார்.
ஆனாலும் அமைச்சர் ஜெயக்குமார், ‘ராஜ்யசபா சீட் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை’ என்று சொல்லி தேமுதிகவுக்கு சீட் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துவிட்டார். இருப்பினும், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், “நாங்கள் கேட்க வேண்டியது எங்கள் கடமை கேட்டுவிட்டோம். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.
இப்படி தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் என தொடர் அழுத்தங்கள் தரப்பட்டபோதும், இன்று (மார்ச் 9) அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அதிமுகவின் தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோரின் பெயர் இடம்பெற்றது. கடுமையாக முயற்சி செய்த தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுத்த அதிமுக, டெல்லி அழுத்தம் காரணமாக ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை வாய்ப்பை வழங்கியது. இது தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு இதுதொடர்பாக பேட்டியளித்த தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், “ராஜ்யசபாவில் தேமுதிகவுக்கு வாய்ப்பு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. தேமுதிகவுக்கு அளித்த வாக்குறுதியை அதிமுக நிறைவேற்றவில்லை” என்று ஒரு வரியில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “ராஜ்யசபா சீட் தொடர்பாக பாமக தவிர வேறு எந்த கூட்டணிக் கட்சியுடனும் அதிமுக ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. ஒவ்வொரு கூட்டணி கட்சியில் இருக்கக்கூடியவர்கள் சீட் கேட்பது இயல்புதான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூட்டணி கட்சி இயல்பு அறிந்து தலைமை முடிவு செய்திருக்கிறது. தேமுதிக இப்போது வரை எங்களுடன் தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமாரும், “இது ஆட்சிமன்றக் குழு கூட்டம் எடுத்த முடிவு. இதனால் தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறினார்.
தேமுதிகவுக்கு வழங்காதது பற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “கொங்கு பகுதிகளில் அதிமுக வலுவாக உள்ளது. வடமாவட்டங்களில் தேமுதிகவை விட பாமக அடர்த்தியாக உள்ளது. தமிழகம் முழுவதும் தங்களது கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என தேமுதிக சொல்லிக்கொண்டாலும் விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இருக்கிறோம் என்ற சொல்லிக்கொள்ளும் தேமுதிகவை தக்கவைப்பதை விட பாமகவே போதும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்திருக்கிறார். மேலும் இந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் கோரிக்கையை ஏற்று ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்ததன் மூலம் தமிழகத்தில் பாமக, தமாகா ஆகிய கட்சிகளையும், டெல்லியில் பாஜகவையும் திருப்திப்படுத்திவிட்டார். தேமுதிக பற்றி அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் மக்களவைத் தேர்தலில் துரைமுருகனோடு கோட்டூர்புரத்திலும், பாஜகவோடு மீனம்பாக்கத்திலும் கூட்டணிப் பேச்சு நடத்தியபோதே எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை தேவையில்லை என்று கருதினார். இப்போதும் அதையே கருதுகிறார்” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
**எழில்**
�,