அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்: வாசன் எம்பி ஆகிறார்!

Published On:

| By Balaji

அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் இன்று (மார்ச் 9) அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் 26 ஆம் தேதி ராஜ்யசபா சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தமாகா தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிமுகவுக்கு இரு உறுப்பினர்கள் கிடைக்கும் பட்சத்தில், அதிமுக கூட்டணிக் கட்சியான ஜி.கே.வாசன் ராஜ்யசபா எம்பியாகிறார். [அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்: தாமதமாவது ஏன்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/08/47/admk-rajyasaba-candidtate-announcemnt-delay-why)என்று நேற்று (மார்ச் 8) மின்னம்பலத்தில் நாம் வெளியிட்டிருந்த செய்தியில், “ அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, அன்வர் ராஜா மற்றும் பலரும் ராஜ்ய சபா சீட்டுக்காக முயல…தேமுதிக, தமாகா ஆகிய கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு ஓரிடம் கேட்கின்றன. தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் ராஜ்ய சபா விவகாரத்தில் வாக்குவாதமே நடந்தது. அதேநேரம் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தனக்கு ராஜ்யசபா வேண்டி பத்திரிகை பேட்டிகள் மூலம் முயற்சிக்காமல், தனக்கே உரிய டெல்லி லாபி வழியாக கடுமையாக முயற்சிக்கிறார்.

வாசனுக்கு மிகவும் வேண்டப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்.தலைமைக்கும், பாஜக தலைமைக்கும் தற்போது நெருக்கமாக இருக்கிறார். அதேபோல தொழிலதிபர் அதானி பிரதமர் மோடிக்கு எப்போதும் நெருக்கமானவர். இந்த இரு முக்கியப் பிரமுகர்களும் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் பெற்றுத் தருமாறு பாஜக தலைமையிடம் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தன்னை சந்திக்க வந்த தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோரிடம், ‘வாசனுக்கு ராஜ்யசபா ஒதுக்குமாறு’ அமித் ஷாவும் அழுத்தம் கொடுத்துள்ளார் என்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே இன்றைய அறிவிப்பில் ஜி.கே.வாசன் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்காக ஜி.கே.வாசன் அதிமுகவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார். “எனக்கு ராஜ்யசபா வாய்ப்பு வழங்கியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை தமிழக அரசுக்கு பெற்றுத் தர பாலமாக செயல்படுவேன்” என்று ஜி.கே.வாசன் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share