nஅரசுப் பரிசோடு அதிமுகவின் பொங்கல் பரிசு!

Published On:

| By Balaji

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழக்கமான சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு முழு கரும்பும், 2,500 ரூபாய் ரொக்கமும் வழங்கி வருகிறது.

இந்த 2,500 ரூபாய் பணப் பரிசு தேர்தலுக்காக வழங்கப்படுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதோடு, இந்தப் பணம் குடும்ப அட்டை தாரர்களுக்கு அதிகாரிகள் மூலம் வழங்கப்படவேண்டுமே தவிர, அதிமுகவினரால் வழங்கப்படக் கூடாது என்றும், ரேஷன் கடைகளுக்கு அருகே அதிமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் ரேஷன் கடைகளுக்கு அருகே இருக்கும் அதிமுக பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்… அரசு வழங்கும் பொங்கல் பரிசைத் தவிர அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் இருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசுப் பை வழங்க வேண்டுமென்று அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.’அதன்படி இப்போது அதிமுக அமைச்சர்கள் முதல் கட்டமாக தங்கள் தொகுதிகளில் பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறார்கள்

அரிசி, சேமியா, நாட்டு சர்க்கரை, கோதுமை, ரவா, மல்லித்தூள், டீ தூள், காபித் தூள், மிளகாய் தூள், உள்ளிட்ட குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள் அந்த பரிசுப் பையில் இருக்கின்றன. இவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு கடைபிடித்த அதே ஃபார்முலாவை அதிமுகவும் பின்பற்றுகிறது.

அதாவது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குடுமப தலைவர் பெயர், ரேஷன் அட்டை எண். அலைபேசி எண் ஆகியவை குறிக்கப்பட்டு,., அந்த டோக்கனின் ஒரு பகுதி அவர்களிடத்திலும் கிழிக்கப்பட்ட இன்னொரு பகுதி உரிய நபரிடத்திலும் வீடு வீடாகக் கொடுக்கப்படுகிறது.

அமைச்சர் எம்.சி. சம்பத்தின் தொகுதியான கடலூர் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த பூத் கமிட்டியில் ஒருவர், லோக்கல் அதிமுக நிர்வாகி ஒருவர் சகிதம் செல்லும் இவர்கள், அமைச்சர் சம்பத் அளிக்கும் பொங்கல் பரிசுக்கான டோக்கனை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு பூத்திலும் ஒரு வீடு கூட விடாமல் அது திமுக காரர் வீடாக இருந்தாலும் அவர்களுக்கு அதிமுகவின் பொங்கல் பரிசு சென்று சேர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். டோக்கன் கொடுத்து முடித்ததும் உடனடியாக பரிசுப் பைகளையும் டெலிவரி செய்கிறார்கள். இந்தப் பையில் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் படம் பெரிய அளவில் அச்சிடப்பட்டு, அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

கடலூரில் அமைச்சர் சம்பத் இப்படியென்றால், விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர் என்று அச்சடிக்கப்பட்ட பைகளில் குடும்பத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் இதேபோல வழங்கப்பட்டு வருகின்றன. ஒருபடி மேலே போய் பொங்கல் வைப்பதற்காக வெண்கலப் பானையும் சேர்த்துக்கொடுக்கிறார் விஜயபாஸ்கர். இந்த பரிசுப் பைகளின் மதிப்பு 2,500 முதல் 3000 ரூபாய் வரை இருக்கும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

அடுத்தடுத்து இது அனைத்து அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளிலும் வழங்கப்படும் என்றும் அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

அரசு மூலம் கொடுக்கப்படும் பொங்கல் பரிசு ஒருபக்கம் என்றால், அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கொடுக்கும் பொங்கல் பரிசால் இரட்டைப் பொங்கல் பரிசை பெறுகிறார்கள் அதிமுக தொகுதிகளில் வசிக்கும் மக்கள்,

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share