அதிமுகவின் உட்கட்சித் தேர்தல்கள் பற்றிய அறிவிப்பு இன்று (டிசம்பர் 2) காலை தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டன.
இதேநேரம் முன்னாள் அமைச்சர் தம்பிதுரையின் மகள் நர்மதா -கௌதம் ஆகியோரின் திருமண விழா சேலத்தில் நடைபெற்றது. இதற்காக அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் இன்று சேலத்தில் குவிந்தார்கள்.
ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி. வேலுமணி, ஜெயக்குமார், பொன்னையன் உள்ளிட்ட பலரும் திருமண விழாவுக்காக சேலத்துக்கு வந்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் தலைமைக் கழகத்தில் இருந்து உட்கட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பும் வெளிவந்தது.
அப்போது பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். ‘அதிமுகவில் இருந்து தொடர்ந்து இஸ்லாமிய பிரமுகர்கள் நீக்கப்பட்டு வருகிறார்கள் இது பிஜேபியின் வழிகாட்டுதலா என்ற பேச்சு இருக்கிறதே?’என்று ஒரு செய்தியாளர் பொன்னையனிடம் கேட்டதற்கு, “அது ஊடகங்களால் சொல்லப்படும் செய்தி. அன்வர் ராஜா நீக்கப்பட்டார். அதே நேரம் ஒரு முஸ்லிம்தான் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.
அதிமுகவின் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு… “புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியிலே செயலாக்கம் நிறைந்த தலைமை மிளிரும், மலரும்”என்றார் பொன்னையன்,
பொதுச் செயலாளர் பதவி பற்றிய கேள்விக்கு பதிலளித்த பொன்னையன், “புரட்சித் தலைவர் காலத்தில் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சட்ட விதி கொண்டுவரப்பட்டது. அது நடைமுறைக்கு இதுகாறும் கொண்டுவரப்படவில்லை. அதை நடைமுறைக்குக் கொண்டுரவேண்டும் என்று தொண்டர்கள், பொறுப்பாளர்கள் விருப்பத்தை தற்போது சட்டத்திருத்தமாகக் கொண்டு வந்திருக்கிறோம். பொதுச் செயலாளர் பதவி என்பது ஒரு கண்ணாக இருந்தது. இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது இரு கண்களாக இருக்கிறது”என்றார்.
சசிகலா வருகை பற்றிய கேள்விக்கு, “சசிகலா வருகை என்பதெல்லாம் இருக்கவே இருக்காது. காரணம் தொண்டர்கள் சசிகலாவின் வருகையை ஒரு சிறிதும் விரும்பவில்லை”என்றார்.
ஒரு செய்தியாளர், “வரும் 7ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்கிறது. அது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?”என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த பொன்னையன், “அப்படிப்பட்ட தேர்தல் 7 ஆம் தேதி நடப்பதாக யார் சொன்னது உங்களுக்கு?”என்று திருப்பிக் கேட்டார். ‘அதிமுக தலைமை அறிவித்திருக்கிறதே? என்று திரும்பவும் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இல்லை”என்று மீண்டும் பதிலளித்தார் சி. பொன்னையன்.
அதிமுகவின் மூத்த தலைவரான பொன்னையனுக்கே கட்சியின் அமைப்புத் தேர்தல் பற்றித் தெரிவிக்கப்படவில்லையா என்று செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைவிட கொடுமையாக பொன்னையன் பெயர்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் தேர்தல் ஆணையராக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தேர்தல் ஆணையருக்கே தெரிவிக்கப்படாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற குழப்பமும் பொன்னையன் பதில் மூலம் உண்டாகியிருக்கிறது.
**-ராகவேந்திரா ஆரா**
�,”