சண்டை போட வேண்டுமென்றால் வாடகை மைதானத்தில் போடுங்கள்: எடப்பாடி, பன்னீர் தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை!

Published On:

| By Gracy

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) பிற்பகல் தொடங்கியது.

ஜூலை 11 ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்துது. அங்கே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில்… அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.

அங்கே ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இதுதொடர்பாக இருதரப்பும் வரும் ஜூலை 25ம் தேதி விளக்கமளிக்கும்படியும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இருதரப்பும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த இரு வழக்குகளும் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தரப்பில், “இதற்குப் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் தேவை” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து “முக்கியமான விவகாரம் என்பதால் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும். மனுதாரர்களின் வாதங்களைக் கேட்டபிறகே தமிழக அரசின் அவகாசம் குறித்து முடிவெடுக்க வேண்டும். அதிமுக அலுவலகத்திற்கு காவல் துறையிடம் பாதுகாப்பு கோரியிருந்தோம். பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தலைமை அலுவலகத்தில் 300-400 பேர் திரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு எங்களை அனுமதிக்காமல் தடுத்தனர். அத்துடன் அங்கிருந்த ஆவணங்களையும் முக்கியமான கோப்புகளையும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடுத்துச் சென்றிருக்கின்றனர். இருதரப்பிலும் தகராறு முற்றியதால்தான் காவல் துறை சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி வருவாய்த் துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்” என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது.

அதற்கு நீதிபதி சதீஷ்குமார், “அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லையா” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு, “காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றவர்களை காவல்துறை தடுக்கவில்லை” என வாதம் வைத்தது.

இடையில் காவல்துறை தரப்பில் குறுக்கிட்டு, ”காவல் துறை சார்பில் பாதுகாப்பு கொடுக்கவில்லை எனச் சொல்வது முற்றிலும் தவறு. இதற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது” என காவல் துறை சார்பில் சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, “இருவருக்குமான பிரச்சினையை வேறு வழிகளில்தான் தீர்க்க வேண்டும். நீதிமன்றத்தை நாடிவந்து தீர்வு காண முடியாது. இருவருக்குமான பிரச்சினையை சிவில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம் என உத்தரவிட வேண்டும். வருவாய்த் துறை கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானது . இதை ஏற்கக்கூடாது. முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கட்சி அலுவலகத்தின் பொறுப்பை பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என அவர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அப்போது காவல் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கத்தில், “காலை 9 மணிக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே தகராறு ஏற்பட்டுவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றபோது , காவல் துறை அதை தடுத்தநிலையில், அதை மீறி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளே சென்றார். ஏற்கெனவே கட்சி அலுவலகம் பூட்டப்பட்டிருந்த நிலையில்தான் இருதரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போதுதான் காவல் துறை வாகனங்கள் மட்டுமல்லாது பொது வாகனங்களும் தாக்கப்பட்டன. அப்பகுதியில் 6 பள்ளிக்கூடங்கள் இருப்பதைக் கருத்தில்கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக விரிவான அறிக்கையை திங்கள் கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகக் கூறினார் அடிஷனல் பப்ளிக் ப்ராசிகியூட்டர்.

அப்போது நீதிபதி சதீஷ்குமார், “அறிக்கை மட்டுமல்ல. அன்று காலை முதல் என்ன நடந்தது என்பதன் வீடியோ காட்சிகளையும் சேர்த்து நாளை மாலைக்குள் தாக்கல் செய்யுங்கள்” என்றார் நீதிபதி.

மீண்டும் அரசுத் தரப்பு வழக்கறிஞர், “வீடியோ காட்சிகளுடன் கூடிய அறிக்கையை திங்களன்று தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் நீதிபதியோ, “இதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது உங்களுக்கு?” என்று கேட்க, “அந்த அறிக்கையில் பல விஷயங்களை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதனால் அவகாசம் வேண்டும்” என்று மீண்டும் கேட்டார் அரசு, (காவல்துறை) வழக்கறிஞர்.

அப்போது நீதிபதி, “அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரும் மக்களிடையே பீதியை உருவாக்கக் கூடாது. அவர்களுக்கு சண்டை போட வேண்டுமென்றால் கால் பந்து மைதானம் போன்ற ஒரு மைதானத்தை வாடகைக்குப் பிடித்து சண்டை போடட்டும். அதைவிட்டு தெருக்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. என்ன நடந்தது என்பதை நாளைக்கு அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

 வேந்தன் ,ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share