அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று (டிசம்பர் 1) சென்னை அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் இன்று கூடிய செயற்குழுவில் தமிழ் மகன் உசேனுக்கு தற்காலிக அவைத் தலைவர் பதவியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மகன் உசேன் தற்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருக்கிறார். எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோதே அவரது தீவிர ஆதரவாளராக இருந்த தமிழ் மகன் உசேன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட தகவலைக் கேள்விப்பட்டபோது தமிழ் மகன் உசேன் குமரி அரசுப் பேருந்து ஓட்டுநராக இருந்தார். பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு சக பயணிகள் மூலம் இந்தத் தகவல் தெரியவர, அப்படியே பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்னைக்கு சென்று எம்.ஜி.ஆரை சந்திக்கப் போய்விட்டார்.
புதிய கட்சி அமைக்க வேண்டும் என்று ரத்தத்தில் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தவர் தமிழ் மகன் உசேன். கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக முதன் முறையாக நியமிக்கப்பட்டவர். பல வருடங்கள் இருந்தவர். 2011ம் ஆண்டு அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் செயலாளராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டார். 2012ல் அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், வக்ஃபு வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
நேற்று இரவு அதிமுகவின் மூத்த தலைவரான அன்வர் ராஜாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், காலை சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ் மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவியை அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
“பிரச்சினை பண்ணாத பிரமுகர் என்று அதிமுகவில் பெயரெடுத்தவர். எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர், பெரிய பதவிகளை வகிக்காதவர் தமிழ் மகன் உசேன். அன்வர் ராஜாவின் நீக்ககத்தை ஈடுகட்டும் விதமாக இந்த திடீர் நியமனத்தை செய்திருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
**-வேந்தன்**
�,