தமிழகத்தில் வரும் 27,30 ஆகிய இரு தேதிகளில் இருகட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு பரிசீலனை முடிந்துவிட்ட சூழலில், வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நேரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் ஆனால், இதனை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் ஒன்றியத்தில் 14ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் பிரியதர்ஷினி, திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் சுபாஷினி போட்டியிடுகிறார்கள். வேட்புமனுவின் ‘சி படிவத்தில் விசிக வேட்பாளர் தனது கட்சியின் பெயரை விசிக என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு தென்னை மரம் சின்னத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று ஒதுக்கினர். தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றிபெறமுடியாது என்று கருதிய விசிக பிரமுகர்கள், தேர்தல் அதிகாரியான புவனேஷ்வரியிடம் சென்று ‘சி’ படிவத்தில் விசிக என்பதை திமுக என மாற்றி உதயசூரியன் சின்னத்தைப் பெற்றுவிட்டார்கள்.
அதேபோல் 21வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராகக் குமுதம், விசிக வேட்பாளர் செல்வி ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், விசிக வேட்பாளருக்கு தென்னை மரம் சின்னமும் வழங்கப்பட்டது. ஆகவே, அங்கேயும் சி படிவத்தைத் திருத்தி உதய சூரியன் சின்னத்தைப் பெற்றுவிட்டார்கள். இதற்கு தேர்தல் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர் அதிமுகவினர்.
இதனையறிந்த அதிமுக முன்னாள் ஒன்றியத் தலைவர், நகரத் தலைவர், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேற்றிரவு கடலூர் பிடிஒ அலுவலகத்திற்கு வந்தார்கள். விசிக வேட்பாளருக்கு எப்படி உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கலாம், அதற்கான அதிகாரத்தை உங்களுக்கு யார் அளித்தது என அதிகாரி அருளரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உதயசூரியன் சின்னத்தை வழங்கக் கூடாது எனக் கூறி சரமாரியாகத் தாக்க முற்பட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். . இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களுடன் சமாதானம் பேசி அனுப்பிவைத்தனர்.
விசிக வேட்பாளர்களுக்கு தென்னை மரம் சின்னத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்ய தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்ததாக தகவல் வெளியானதால், திமுக, விசிகவினரும் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.
இதுதொடர்பாக திமுக பிரமுகர்களிடம் விசாரித்தோம், “கூட்டணிக் கட்சியான விசிக ஒரு நிலையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அதிமுக வெற்றிபெற இப்படி ஒரு சதித் திட்டத்தை விசிக பிரமுகர்கள் செய்துவிட்டார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடுவதாக சி படிவத்தில் குறிப்பிட்டுவிட்டு பிறகு அதை அழித்துக் கொடுத்ததுதான் குழப்பத்தை உருவாக்கியது” என்று வேதனைப்பட்டனர்.
**திமுக போராட்டம்**
திட்டக்குடி வட்டத்திலுள்ள நல்லூர் ஒன்றியத்தின் 19 வது வார்டில் திமுக வேட்பாளர் கலைவாணி சதீஷ், அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி ராஜேந்திரன், அமமுக வேட்பாளர் தனலட்சுமி ஜெயக்குமார், சுயேச்சைகள் சித்ரா முருகானந்தம், ரம்யா ராமலிங்கம் போட்டியிட்டனர். இதில், அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மூவரும் முதலில் வாபஸ் வாங்கினர். இறுதியாக திமுக வேட்பாளர் கலைவாணி சதீஷும் வாபஸ் பெற்றதால், அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
உடனே கொதித்தெழுந்த திமுகவினர், தங்களது வேட்பாளரை மிரட்டியும் கடத்தி சென்றுவிட்டனர் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன், தேர்தல் பார்வையாளர் மாதவரம் சுதர்சனம், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனை சந்தித்து தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாதவரம் சுதர்சனம், “நல்லூர் வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரின் கையொப்பத்தை அதிகாரிகளே போட்டு, மனுவை வாபஸ் பெற்றுவிட்டதாகவும், அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டதாகவும் அறிவித்துள்ளனர். நாங்கள் விசாரித்தபோது, எங்களுடைய வேட்பாளர் கையெழுத்து போடவில்லை என்று அறிகிறோம். இதனை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே, 19ஆவது வார்டு தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார். தேர்தல் நடைபெறுவதற்குள் இதுபோன்ற போராட்டங்களையும், சச்சரவுகளையும் அதிகம் நடைபெறலாம் என்று கூறுகிறார்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவரும் காவல் துறையினர்.�,