அதிமுக கூட்டணியில் பிரச்சினையா? அமைச்சர் விளக்கம்!

Published On:

| By Balaji

அதிமுக கூட்டணியில் எழுந்துள்ள சலசலப்புகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனிடையே தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என வி.பி.துரைசாமி சொன்னார். இதுதொடர்பாக எல்.முருகன், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மறுபுறம் ஆட்சியைத்தான் பிடிக்க முடியவில்லை, ஆட்சியில் பங்காவது வேண்டும் என துணை முதல்வர் பதவி கேட்டு அதிமுக தரப்பிடம் பாமக தரப்பு நெருக்கடி அளித்துவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ராஜ்யசபா பதவி தராததால் கூட்டணியில் அதிருப்தியில் இருந்து வருகிறது தேமுதிக. இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆனால் தனித்துப் போட்டியிடுவதை நிர்வாகிகள் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும் இதுபோன்ற விஷயங்கள் அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

பிரேமலதாவின் கருத்து குறித்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தேமுதிகவின் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். கூட்டணியை பிளவுபடுத்தும் வகையிலான கருத்து என அதனை எடுத்துக்கொள்ள முடியாது” என பதிலளித்தார்.

அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்லக்கூடிய வகையில்தான் அதிமுக தலைமையிலான கூட்டணி இருந்துவருகிறது என்ற ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் பலத்துடன் கட்சி இருக்கிறது. கூட்டணியில் உள்ளவர்கள் கருத்து சொல்வதாலேயே அதிமுக பலவீனமடைந்துவிட்டதாக கருத முடியாது. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். ஆனால், தற்போதைய சூழலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று விளக்கினார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share