பொதுக்குழுவுக்கே அதிகாரம்: எடப்பாடி வீட்டு வாசலில் இன்பதுரை மெசேஜ்
அதிமுக பொதுக்குழு வரும் ஜூன் 23 ஆம் தேதி கூட இருக்கும் நிலையில், அதில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். இதை அறிந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவரக் கூடாது” என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார்.
மேலும் பன்னீர் தரப்பில் இருந்து நேற்று அதிமுக மாசெக்களுக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்ட ஆறு பக்க கடிதத்தில், “பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவந்தால் அது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். அதிமுகவின் பெயர், சின்னம் முடக்கப்படும் நிலை உருவாகும்” என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இப்போதைக்கு இருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஐந்தாண்டு பதவி காலம் இருக்கும்போது இப்போது ஒற்றைத் தலைமை கொண்டுவர முடியாது என்றும் அந்த கடிதத்தில் எச்சரிக்கையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 19) காலை அதிமுகவின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் இன்பதுரை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அதன் பின் எடப்பாடி வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேற்று பன்னீர் தரப்பு வெளியிட்ட கடிதத்துக்கு பதில்களையும், விளக்கங்களையும் கொடுத்தார்.
“கழகத்தை வழிநடத்தத் தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக்குழு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஐந்து ஆண்டுகளுக்கானது என்று சிலர் சொல்கிறார்கள். இது என்ன கான்ட்ராக்டா? கழகத்தில் இருக்கும் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர் பதவிகளும் ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் கொண்டவைதான். ஆனால் இடையில் அவர்களை நீக்குவதில்லையா? மாற்றுவதில்லையா? அதேபோல கழகத்தின் சட்ட விதிமுறைகளைப் பயன்படுத்தி பொதுக்குழுவின் அதிகாரத்தின் மூலம் மாற்றுவதற்கு உரிமை உள்ளது. இதில் கான்ட்ராக்ட் என்பதே இல்லை. யாரையும் ஐந்து வருடத்துக்குள் அசைக்க முடியாது என்பதெல்லாம் கிடையாது. நான் அரசியல் பேசவில்லை. அதிமுகவின் சட்டத்தைப் பேசுகிறேன்.
இந்துக்களுக்கு பகவத் கீதை, கிறிஸ்துவர்களுக்கு பைபிள், முஸ்லிம்களுக்கு குரான் என்பதைப் போல அதிமுகவுக்கு அதன் சட்டப் புத்தகம் இருக்கிறது. அந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால் பொதுக்குழுவுக்குதான் உயர்ந்தபட்ச அதிகாரம் இருக்கிறது.
பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் மிக்கது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கியது பொதுக்குழுதான். அவரை நீக்கியதும் பொதுக்குழுதான். இடைக்கால ஏற்பாடாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை ஐ.நா. சபையா நியமித்தது? அவர்களையும் பொதுக்குழுதான் நியமித்தது. ஒற்றைத் தலைமை என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. அது புரட்சித் தலைவர் வகுத்துத் தந்த சட்ட விதிகளில் ஏற்கனவே உள்ளதுதான்.
தேர்தல் ஆணையம் சென்றால், ‘நீங்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராக்குங்கள். அதற்கான கட்சி விதிகளை காட்டுங்கள்’ என்றுதான் கேட்பார்கள். எனவே அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு சட்ட விதிகளில் இடமிருக்கிறது.
நீதிமன்றத்துக்கு போகிறோம், சின்னத்தை முடக்கிவிடுவோம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அதிமுகவுக்கு என ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி நடந்திருக்கிறீர்களா என்றுதான் நீதிமன்றம் பார்க்கும். எனவே அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுக் குழுதான் உயர்ந்த பட்ச அமைப்பு. ஒற்றையா, இரட்டையா என்ற அரசியலில் நான் செல்லவில்லை. சட்ட ரீதியாக சொல்கிறேன். பொதுக்குழு என்பது ப்யூர்லி நம்பர் கேம். பெரும்பான்மையை பெறும் தீர்மானம் வெற்றிபெறும்” என்று கூறினார் இன்பதுரை.
இதன் மூலம் பெரும்பான்மை பலத்தை தெளிவாக பெற்றிருக்கும் எடப்பாடி தரப்பில் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தைக் கொண்டுவரத் தயாராகிவிட்டார்கள் என்பது தெரிகிறது.
-**வேந்தன்**