விறுவிறு உட்கட்சித் தேர்தல்: பொதுக்குழுவை நோக்கி எடப்பாடி

politics

அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கி இயற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என ஏப்ரல் 11ம்தேதி சென்னையில் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். நேற்று ஏப்ரல் 11ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 25 மாவட்டங்களில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.

சசிகலா உயர்நீதிமன்றத்திற்கு அப்பீல் செல்வேன் என்றும் பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்ந்து நமக்கு சாதகமாக வரும் நிலையில், சசிகலாவை பற்றி இனி அதிமுகவினர் எந்த வார்த்தையும் பேசக்கூடாது. அவரை ஒரு பொருட்டாகவே மதிக்க தேவையில்லை’ என்று கூறியிருக்கிறார்.

மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல் 16ஆம் தேதி நடந்து முடிந்த பிறகு அதிமுகவின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன மாவட்ட செயலாளர் தேர்தல் ஏப்ரல் 19, 21 தேதிகளில் நடக்க இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் விவாகரத்தில் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிக அளவு மாவட்ட செயலாளர்களை தன்பக்கம் வைத்திருப்பது அதிமுகவில் கண்கூடாக தெரிகிறது.

இந்த நிலையில் விறுவிறுவென உட்கட்சி தேர்தல்களை முடித்துவிட்டு
தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகளை கொண்டு அதிமுகவின் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி.

பொதுக்குழுவில் தனக்கு மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட ஆதரவு இருப்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிச்சாமி வேகமாக முன்னேறுவார் என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.

**வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *