அதிமுக மாவட்டச் செயலாளர் அடித்த போஸ்டர் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிமுகவில் அமைப்பு ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பத்தூா் மாவட்டச் செயலாளராக அமைச்சா் கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டார். குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி), அணைக்கட்டு தொகுதிகள் உள்ளடக்கிய வேலூா் புறநகர் மாவட்டச் செயலாளராக மாவட்ட ஆவின் தலைவா் த.வேலழகன் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் சிலர் அடித்த போஸ்டர்களில் இருந்த பிழைகள் சமூக வலைதளங்களில் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்ததற்கு நன்றி தெரிவிக்க வேலழகன் அடித்த போஸ்டர்தான் தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது.
அதாவது, போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் உள்பட அனைவரின் பெயர்களும் அதிமுகவின் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் இடம்பெறாமல், திமுகவின் கறுப்பு, சிவப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது. பன்னீர்செல்வத்தின் பெயரில் மட்டும் மேலோட்டமாக அதிமுக நிறத்தின் சாயல் தெரிந்தது.
இந்த புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பலரும், திமுகவின் கறுப்பு சிவப்புக்கும், அதிமுகவின் கறுப்பு, சிவப்பு, வெள்ளைக்கும் வித்தியாசம் தெரியாதவர் மாவட்டச் செயலாளரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
**எழில்**�,