2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளைத் தற்போதே துவங்கிவிட்டன. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை முன்னிறுத்தியே அக்கட்சி தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் அதிமுக தொடங்கப்பட்டு 48 வருடங்கள் முடிந்து நாளையுடன் 49ஆவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (அக்டோபர் 16) கூட்டாக எழுதிய மடலில், “தமிழ் நாட்டில் இதுவரை 29 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தி மக்களுக்குத் தொண்டாற்றி வருவதோடு, இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்களுக்குத் தொண்டாற்ற இருக்கும் அதிமுகவின் பணிகள் வரலாற்றுப் பொன்னேடுகளில் காலமெல்லாம் மின்னிக் கொண்டிருக்கும்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் பயணிக்கும் நாம், நம் இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு நம்முடைய ஒற்றுமை உணர்வாலும், திறன்மிகு உழைப்பாலும், அதிமுகவையும், தமிழக அரசையும் பொறுப்புணர்வோடு கட்டிக்காத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மடல். pic.twitter.com/YaOddzHvcq
— AIADMK (@AIADMKOfficial) October 16, 2020
தமிழ் நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும். கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ் நாடு உயர் நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியங்களை அடையவே அதிமுக அரசு உழைத்துகொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர்கள்,
“அடுத்த ஆண்டு 2021, நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. நம் இருபெரும் தலைவர்களைப் போல, நாமும் தேர்தல் களத்தில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம். அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, கழகமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம். `வாருங்கள் உடன்பிறப்புகளே, நம் பணிகளை இன்றே தொடங்குவோம்’. அதிமுகவின் பொன்விழா ஆண்டில், தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியே தொடரும் என்று நாமும் சபதம் ஏற்று செய்து முடிப்போம்” என்று அழைப்பு விடுத்தனர்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நோக்கி புதுப் பயணம் தொடங்குவோம் எனவும், அதிமுகவின் பொற்கால ஆட்சி என்றும் தொடர சூளுரைப்போம் என்றும் மடலில் குறிப்பிட்டுள்ளனர்.
**எழில்**�,”