தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அலைந்த களைப்பில் சில நாட்கள் ஓய்வெடுத்த வேட்பாளர்கள், தற்போது தங்களது மனப் புழுக்கங்களை எல்லாம் தலைமைக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலும் அதிமுக வேட்பாளர்கள்தான் தங்கள் தலைமையிடம் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் குமுறல்களைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். ஏற்கனவே தேர்தல் முடிந்த கையோடு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பல்வேறு நிலையில் இருக்கும் நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசினார். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில தொகுதி நிர்வாகிகளைக் கூப்பிட்டு கடுமையாக கோபப்பட்டிருக்கிறார். முதற்கட்டமாக தனது சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆய்வு நடத்திய முதல்வர், கெங்கவல்லி, சேலம் வடக்கு ஆகிய தொகுதிகளில் அதிமுக நிர்வாகிகளை அழைத்து அர்ச்சனை செய்திருக்கிறார். தலைமை கொடுத்த பணம் ஒரு கட்டத்துக்கு மேல் கீழே இறங்காமல் தேங்கிவிட்டது என்று தனக்கு வந்த புகார்களின் அடிப்படையிலேயே அந்த அர்ச்சனையை நடத்தினார் எடப்பாடி.
அடுத்தடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதே மாதிரியான புகார்கள் முதல்வரிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. தென் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில்,
“தமிழகம் முழுமைக்குமான தேர்தல் செலவை எப்படி சமாளிப்பது என ஓபிஎஸ் சும், இபிஎஸ் சும் தேர்தலுக்கு முன்பே ஆலோசித்தனர். அதன் அடிப்படையில், தென் மாவட்ட தொகுதிகளுக்கு ஓபிஎஸ் மூலம் பணம் வழங்கப்படும் என்று நிர்வாகிகளிடமும், வேட்பாளர்களிடமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பலருக்கும் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளரான ஜெரால்டுக்கும் ஓபிஎஸ் மூலம் பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் கூட அவருக்கு தலைமையிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை. மிகவும் வேதனை அடைந்தவர் ஆசிரியையாக இருக்கும் தனது மனைவியின் சொத்துகளை அடமானம் வைத்து 60 லட்சம் புரட்டி கடைசிகட்ட செலவுகளை கவனித்திருக்கிறார்.
இந்தத் தகவலும் எடப்பாடியை சென்று சேர்ந்திருக்கிறது. பாளையங்கோட்டை மட்டுமல்ல, பல தொகுதிகளில் இருந்தும் இதேபோன்ற தகவல்கள் எடப்பாடிக்கு சென்றுள்ளது. இதுவும் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் காரணியாக உருவெடுக்கும் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி இதுபற்றி இப்போது விரிவான விசாரணை நடத்திவருகிறார் “ என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
**-வேந்தன்**
�,