திருநெல்வேலி, திசையன்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கும் விழா 648 இடங்களில் இன்று நடந்தது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், திசையின்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பதவியேற்க வந்த அதிமுக, பாஜகவினர் ஹெல்மெட் அணிந்து வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்களிடம் விசாரிக்கையில், “பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்ற நினைக்கிறது. மேலும், பதவியேற்றால் மண்டையை உடைப்போம் என போனில் மிரட்டல் வந்தது. அதனால், திமுகவினர் தாக்கலாம் என்ற அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து பதவியேற்பு விழாவுக்கு வந்தோம்” என்று கூறியுள்ளனர்.
திசையன்விளை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 9 இடங்களையும், திமுக, காங்கிரஸ் தலா இரண்டு, பாஜக, தேமுதிக தலா ஒன்று மற்றும் சுயேச்சைகள் மூவர் வெற்றி பெற்றுள்ளனர். அதனால், அதிமுக பாஜக ஆதரவுடன், பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.
முன்னதாக, கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துவதாகக் கூறி பாஜகவினர் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**