Eஅதிமுக வேட்பாளர் தற்கொலை!

Published On:

| By admin

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தங்களுடைய கட்சி வேட்பாளர்களை எப்படியும் ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஜானகிராமன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து, வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதாரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதிலும் ஜானகிராமன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். உடனடியாக இதுகுறித்து காஞ்சிபுரம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஜானகிராமன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்தல் நெருங்கி வருகிற நேரத்தில் ஜானகிராமன் தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பயமா அல்லது மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டாரா என்று அவரின் தற்கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் காஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share