இரட்டை இலை அபகரிப்பு: அ.இ.அ.தி.மு.க கட்சி விதிகள் சொல்வது என்ன?

Published On:

| By Balaji

ராஜன் குறை

தொலைக்காட்சி விவாதங்களில் அவ்வப்போது அ.இ.அ.தி.மு.க கட்சி விதிமுறைகள் பற்றி யாராவது குறிப்பிடுவார்கள். இப்போது சசிகலா சிறைவாசம் முடிந்து வெளி வந்திருப்பதால் மீண்டும் அவர் பொதுச்செயலாளரா இல்லையா, அவரை பொதுச்செயலாளராக்கிய பொதுக்குழு முறையாகக் கூட்டப்பட்டதா, அவரை நீக்கிய பொதுக்குழு முறையாக கூட்டப்பட்டதா என பல கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. இரண்டு முக்கியமான அம்சங்கள் இந்த பிரச்சினையில் கவனத்திற்குரியன.

இந்திய தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒரு வேட்பாளருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி டிசம்பர் 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல், பிற இடைத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை அவர்கள் பரிந்துரையின் பேரில் கட்சி வேட்பாளர்களுக்கு அளித்துள்ளது.

ஆனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் சசிகலா தன்னை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின் முடிவுக்கு தன்னுடைய முடிவு கட்டுப்பட்டது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து கே.சி. பழனிச்சாமி போட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் ஏன் 2016 ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே பொதுக்குழு முடிவுகளை எதிர்க்கவில்லை என்று கேட்டது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் முடிந்த முடிவல்ல.

கே.சி.பழனிசாமியும், வேறு சிலரும் கூறுவது போல அண்ணா தி.மு.க கட்சி விதிமுறைகளின் படி பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானது. கே.சி.பழனிசாமி அவரது வலைத்தளத்தில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்டு, 5.2.2007 அன்று திருத்தங்கள் செய்யப்பட்ட கட்சியின் அமைப்பு விதிகளின் நகலை தரவேற்றம் செய்துள்ளார். [பார்க்க…](http://aiadmk.org.in/wp-content/uploads/2017/01/aiadmk_bylaw.pdf). அந்த விதிகளை ஆராய்ந்து பார்க்கும்போது பன்னீர்செல்வத்தின் சதியும், எடப்பாடி பழனிசாமியின் துரோகமும் சேர்ந்து இரட்டை இலையை களவாடி இருப்பதை யார் வேண்டுமானாலும் சுலபமாக ஐயம் திரிபுற புரிந்துகொள்ள முடியும். எப்படி என்று பார்ப்போம்.

**கட்சி விதிகள் கூறுவது என்ன?**

கட்சி விதிகளில் முக்கியமான விதியான 20 (XII) என்பதிலிருந்து துவங்குவோம். இந்த விதி என்ன கூறுகிறது என்றால் தேர்தல் அதிகாரிக்கு கட்சியின் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை கோரும் கடிதத்தை பொதுச்செயலாளர் மட்டுமே அனுப்ப முடியும்.

(இதனால்தான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது சின்னத்திற்கான விண்ணப்ப படிவத்தை அப்போலோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் கட்டை விரல் ரேகையை வைத்து மருத்துவர்களின் உறுதிப்படுத்தலுடன் சேர்த்து அனுப்பினார்கள். அது அவருடைய ரேகைதானா, அவர் சுயநினைவுடன் ரேகை வைத்தாரா என்பது போன்ற கேள்விகள் நீதிமன்ற வழக்காக மாறியது)

இந்த விதியை நாம் அடுத்த முக்கிய விதியான 20 (II) என்பதுடன் சேர்த்து வாசிக்க வேண்டும். அது என்ன கூறுகின்றது என்றால் பொதுச்செயலாளர் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதாவது சின்னத்தை கோரும் அதிகாரம் யாருக்கு உண்டு என்றால் யார் அடிப்படை உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவருக்குத்தான் உண்டு.

இந்த இரண்டு விதிகளும் முழுமையான அழுத்தம் பெறுவது விதி 43 -இன் மூலமாக. மிக முக்கியமான விதி இது, இந்த விதி என்ன சொல்கிறது என்றால் பொதுக்குழுவிற்கு கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், விதிமுறைகள் அனைத்தையும் மாற்றுவதற்கு அதிகாரம் உண்டு: ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை மட்டும் பொதுக்குழுவால் மாற்ற முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது. அவ்வாறு பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது கட்சியின் ஆதாரக் கட்டுமானம் (basic structure) என்று கூறுகிறது. அதை மாற்றினால் கட்சியின் ஆதாரக் கட்டுமானமே சீர்குலைந்துவிடும் என்பதே உட்கிடை.

விதி 43-இன் முற்பகுதியை வாசிக்கும்போது பொதுக்குழுவுக்கு பொதுச்செயலாளர் தேர்வு குறித்த விதியைத் தவிர எந்த விதியையும் மாற்ற அதிகாரம் இருக்கிறது என்று புரியும். அதனால் பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க முடியும். அந்த பதவிகளுக்கு யாரையும் தேர்வு செய்யவும் முடியும்.

ஆனால் பொதுச்செயலாளரின் அதிகாரத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு மாற்றுவது என்பது விதி 43-இன் இரண்டாம் பகுதியில் கூறியபடி கட்சியின் ஆதாரக் கட்டுமானத்தை மாற்றுவதாகும். பொதுச்செயலாளர் பதவியையே நீக்குவது என்பதும் விதி 43-இன் படி ஆதாரக் கட்டுமானத்தையே சீர்குலைப்பதாகும். அதற்கான அதிகாரம் நிச்சயம் பொதுக்குழுவிற்குக் கிடையாது என்பதே விதி 43.

விதி 45 கட்சியின் பொதுச்செயலாளருக்கு எந்த விதியையும் மாற்றும் அதிகாரத்தை வழங்குகிறது. அப்படி அவருக்கு முழு அதிகாரத்தை வழங்க காரணம் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதுதான். பொதுக்குழுவுக்கும் அனைத்து அதிகாரங்களும் இருந்தாலும் பொதுச்செயலாளர் தேர்வில் கைவைக்கும் அதிகாரம் கிடையாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பொதுக்குழுவை உருவாக்குவதில் பொதுச்செயலாளருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. விதி 19-இன் பிரிவுகளை வாசித்தால் பொதுக்குழுவின் உறுப்பினர்களாகிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், பொருளாளர் போன்ற பலரை நியமிப்பது பொதுச்செயலாளர்தான். பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் போன்ற பதவிகளில் இருப்பவர்களை நீக்கவும், மாற்றவும் அதிகாரம் உள்ளவர் பொதுச்செயலாளர். இதையெல்லாம் தவிர விதி 19 (IV) இன் படி நூறு பேர் வரையிலான பொதுக்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. மாவட்டக் கழகங்கள் பொதுக்குழுவிற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் என்றாலும், பொதுச்செயலாளரின் நியமன அதிகாரத்தினால் உருவாகும் பொதுக்குழு உறுப்பினர்களும் கணிசமானவர்கள் எனலாம். பொதுக்குழுவின் ஆயுட்காலம் ஐந்தாண்டுகள் என்று விதி 19 (IX) கூறுகிறது. ஆனால் புதிய பொதுக்குழு அமைக்கப்படும் வரையில் பொதுக்குழுவின் ஆயுட்காலம் நீடிக்கும் என்றும் கூறுகிறது.

விதி 20 (V) இன் படி பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட பொருளாளர், துணை பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் போன்றவர்கள் பொதுச்செயலாளர் அந்த பதவியில் நீடிக்கும்வரை நீடிக்கலாம். இந்த விதி இன்னொரு முக்கியமான அம்சத்தை தெளிவுபடுத்துகிறது. ஒருவேளை பொதுச்செயலாளர் பதவி இடையில் காலியாகிவிட்டால், அவரால் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அந்த பதவிகளில் தொடரலாம். புதிய பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர்கள் அப்பதவிகளில் நீடிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் அடிப்படை உறுப்பினர்களெல்லாம் ஓட்டுப் போட்டு பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்த பிறகு, (அல்லது தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒருவருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யவில்லையென்றால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு) அந்த புதிய பொதுச்செயலாளரே கட்சியை முழுவதுமாக வழிநடத்திச் செல்வார். அவரே கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவார், பொதுக்குழு, செயற்குழு போன்றவற்றை இறுதி செய்வார், பல்வேறு பொறுப்புகளுக்கு கட்சிக்காரர்களை நியமனம் செய்வார்.

**பன்னீர்செல்வத்தின் சதியும், பழனிசாமியின் துரோகமும்**

இந்த கட்டுரை சசிகலா ஆதரவு கட்டுரை அல்ல. அதனால் இங்கே பன்னீர்செல்வத்தின் சதி, பழனிசாமியின் துரோகம் என்பது கட்சி விதிகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதைத்தான் குறிக்கிறது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியின் அடிப்படை கட்டுமானத்தை இவர்கள் சீர்குலைத்துவிட்டார்கள் என்பதுதான் பிரச்சினை.

ஜெயலலிதாவின் இணைபிரியாத துணையாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா முப்பதாண்டுகள் வாழ்ந்திருந்தாலும், அவருடன் சேர்ந்து கட்சி சார்ந்த, ஆட்சி சார்ந்த முடிவுகளை எடுத்திருந்தாலும், அவர் கட்சியில் பதவிகளை வகிக்கவில்லை. ஜெயலலிதாவும் அவரை தன்னுடைய வாரிசாக குறிப்பிடவில்லை. அதனால் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்பதற்கோ, மறுப்பதற்கோ எல்லா உரிமையும் கட்சியின் பிற தலைவர்களுக்கு இருக்கிறது. அதேபோல சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் அவரை முதல்வராக ஏற்பதற்கோ மறுப்பதற்கோ உரிமை இருக்கிறது.

அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்திருக்கவேண்டும். சசிகலா வேட்பு மனு தாக்கல் செய்தால், அவரை எதிர்த்து போட்டியிட விரும்புபவர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கவேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் யார் பொதுச்செயலாளர் என்பதை முடிவு செய்ய வழி வகுத்திருக்க வேண்டும்.

ஆனால் நடந்த நாடகங்களை நாமறிவோம். 29 டிசம்பர் 2016 அன்று பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தது. இது விதி 43 கூறுவதற்கு முரணானது. ஒருவேளை அது தாற்காலிகமான ஒரு கெளரவ நியமனம் என்றால் அவர் அடிப்படை உறுப்பினர்களால் சட்டப்படி தேர்ந்தெடுக்கப் படும் வரை அவருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரங்களை வழங்க முடியாது.

அடுத்து பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி ஏகமனதாக சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். கவர்னர் பதவி பிரமாணம் செய்துவைக்காமல் வெளியூர் சென்றுவிட்டார். திடீரென்று பன்னீர்செல்வம் பாரதீய ஜனதா தூண்டுதலில் இந்த இரண்டு முடிவுகளுக்கும் முரண்பட்டு சசிகலாவை எதிர்க்கத் துவங்கினார். அவருக்கு 11 சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் ஆதரவளித்தார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி சிறை தண்டனை பெற்றவுடன் ஃபிப்ரவரி 14-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்துவிட்டு, டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்துவிட்டு சசிகலா சிறை சென்றார். பின்னர் பழனிசாமியும் பாரதீய ஜனதா ஆதரவை பெற்று தினகரனை புறக்கணித்து பன்னீர் செல்வத்துடன் இணைந்தார்.

இருவரும் சேர்ந்து பொதுக்குழுவை 12 செப்டம்பர் 2017 அன்று கூட்டி, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, அந்த பதவியையும் ரத்து செய்து, பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு மாற்றினார்கள். இப்படி செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்பதை மேலே பார்த்தோம்.

இப்போது என்ன தீர்வு? ஓரளவு விதிமுறைகளை வாசித்து புரிந்துகொள்ளக்கூடிய யாரும் கூறக்கூடியது என்னவென்றால்:

அ.இ.அ.தி.மு.க கட்சி முறைப்படி அடிப்படை உறுப்பினர்களைக்கொண்டு புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யாததால் இரட்டை இலை சின்னத்தை கோரும் அதிகாரம் கட்சியில் யாருக்கும் இல்லை. சின்னம் முடக்கப்பட வேண்டும்.

முந்தைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணமடையும்போது இருந்த பொதுக்குழு சேர்மன் மதுசூதனன் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அறிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர் போட்டியிட்டால் அனைத்து அடிப்படை உறுப்பினர்களிடையேயும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவை தாற்காலிக பொதுச்செயலாளராக பொதுக்குழு தேர்வு செய்ததால் அவருக்கு பொதுச்செயலாளருக்கான தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு.

ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் பொதுச்செயலாளருக்கான தேர்தலில் பங்கெடுக்க உரிமை உண்டு. மற்றபடி தேவையான தகுதிகளைக் கொண்ட உறுப்பினர்கள் யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

நான்காண்டுகளாக வேண்டுமென்றே பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் இருந்தது கட்சியின் ஆதார விதிக்கே எதிரானது. உடனடியாக பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

**கட்சி விதிகள் புனிதமானவையா? மாற்றப்பட முடியாதவையா?**

கட்சிக்கு என்று பாரம்பர்யமும் (legacy), மக்களிடையே நன்மதிப்பும் உள்ளது. இவை நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர், அவரது தொண்டர்கள் ஆகியவர்களது உழைப்பால் உருவானது. இரட்டை இலை சின்னத்தின் மதிப்பு வரலாற்று ரீதியானது. எனவே அன்று வகுக்கப்பட்ட கட்சியின் விதிமுறைகளை புறக்கணித்துவிட்டு யாரும் கட்சியின் சின்னத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அப்படி செய்வதை முறையற்ற அபகரிப்பு என்றுதான் கூற முடியும். தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொண்டது மோசமான முன்னுதாரணம். இது போன்ற அரசியல் முக்கியத்துவமுள்ள வழக்குகளை விசாரிக்காமல் கால தாமதம் செய்வது நீதிமன்றங்கள் மக்களாட்சி விழுமியங்களை புறக்கணிப்பதாகவே அர்த்தப்படும்..

எந்த ஒரு அமைப்பின் விதிமுறைகளை உருவாக்கும்போதும் அதை எப்படி மாற்றலாம் என்பதற்கான விதிமுறைகளும் இடம்பெற்றிருக்கும். அ.இ.அ.தி.மு.க-வை பொறுத்தவரை எந்த விதியையும் மாற்றும் உரிமை அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளருக்கு உண்டு. அதற்கடுத்து பொதுக்குழுவுக்கும் எல்லா விதிமுறைகளையும் மாற்றும் உரிமை உண்டு – ஒரே ஒரு விதிமுறையை தவிர. அதுதான் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்யவேண்டுமென்ற ஆதாரமான கட்டுமானம் (basic structure). ஒரு அரசியல் கட்சி என்பதும் பொது நிறுவனம். அந்த நிறுவனத்தின் விதிகளின்படி அது நடத்தப்படவில்லையென்றால் கேள்வி கேட்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு. கட்சியின் ஆதாரமான கட்டுமானம் காக்கப்பட வேண்டுமென கட்சியின் தொண்டர்களும், அரசியல் நோக்கர்களும், சட்ட வல்லுனர்களும் வலியுறுத்த வேண்டும்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share