சிறப்புக் கட்டுரை: ஊடக விவாதங்களிலிருந்து ஒதுங்குவது சரிதானா?

politics

அ.குமரேசன்

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று அதிமுக முடிவு செய்திருப்பது ஒரு விவாதப் பொருளாகியிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடக நிறுவனங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம்போன போக்கில் ஊடக அறத்துக்குப் புறம்பாகவும் கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்கள். ஊடக விவாதங்களில் அதிமுக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். தங்கள் கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவதாக யாரையும் வைத்துப் பேசுவதை நிறுத்துமாறும், கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் கருத்துகளைத் தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும், வேறு யாரையும் அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக-விடம் ஆட்சிப்பொறுப்பை அளிக்க மறுத்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுக்கு முதன்மை எதிர்க்கட்சி என்ற முக்கியமான பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போதைய ஆட்சி, அரசியல் போக்குகள், சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தனது விமர்சனங்களை முன்வைப்பதற்கான விவாதத்தளத்திலிருந்து அக்கட்சி வெளியேறுவது சரியான முடிவுதானா? அறிக்கை விடுவது, தனது கூட்டங்களில் பேசுவது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளிப்பது போன்றவை மட்டும் போதுமென்று ஒரு அரசியல் கட்சி முடிவெடுக்கலாமா? ஜனநாயக மனங்களில் இந்தக் கேள்விகள் எழத்தான் செய்யும் – இது அக்கட்சியின் உரிமை என்றபோதிலும்கூட.

அதிமுக-விலிருந்து வலுவாக வாதங்களை முன்வைப்பவர்கள் என ஒருசிலரைத்தான் தொலைக்காட்சி நேயர்கள் பார்த்திருப்பார்கள். முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆளுமையில் வேறு யாரும் அந்த விவாதங்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை. ஏதோவொரு வகையில் அக்கட்சியின் ஆதரவாளர்களாகக் கருத்துக் கூறுகிறவர்களே பங்கேற்று வந்திருக்கிறார்கள். ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமைக்கு வந்த பிறகுதான் அக்கட்சியினர் தொடர்ச்சியாக விவாதங்களுக்கு வரத்தொடங்கினார்கள். அதேவேளையில், ஒன்றிய அரசு அல்லது ஒன்றிய ஆளுங்கட்சி தொடர்பான கேள்விகள் வரும்போது அவர்கள் ஒன்று, ஆதரவான நிலைப்பாட்டிலிருந்தே பேசுவார்கள் அல்லது சுற்றிவளைத்துப் பேசி மழுப்பிவிடுவார்கள். இதுவே அவர்களிடமிருந்து தெளிவான, திட்டவட்டமான நிலைப்பாடு சார்ந்த விளக்கங்கள் வரப்போவதில்லை, அதற்கான கொள்கை வலிமையை அக்கட்சி இழந்துவிட்டது என்ற எண்ணம் ஏற்படுவதற்கு காரணமானது.

**சங்கடக் கேள்வி ஒரு வாய்ப்பு**

இதற்கு முன்பும் பல கட்சிகள் தொலைக்காட்சி விவாதங்களைத் தற்காலிகமாகப் புறக்கணித்திருக்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சியின் குறிப்பிட்ட ஒரு நெறியாளர் வருவாரானால் அந்த விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று முன்பு தமிழக பாஜக தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். பின்னொரு கட்டத்தில், எல்லாத் தொலைக்காட்சி விவாதங்களையும் புறக்கணித்தார்கள். இப்போதும்கூட அதேபோல் தற்காலிகப் புறக்கணிப்பு என முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக ஊடகங்கள் தங்கள் கட்சிக்கு எதிரான நிலையெடுத்துச் செயல்படுகின்றன, தங்களுக்குப் போதுமான வாய்ப்பளிக்கப்படுவதில்லை, எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துகொண்டு நெறியாளர்களும் பாஜக-வுக்கு நெருக்குதலைத் தரக்கூடிய கேள்விகளைக் கேட்கிறார்கள் என்று பாஜக வட்டாரத்தில் சொல்கிறார்கள். ஆனால், பாஜக தலைவர் ஒருவர், வலதுசாரி சிந்தனையாளர் அல்லது சமூக ஆர்வலர் அல்லது பொருளாதார வல்லுநர் என அவர்கள் தரப்புக்குத்தான் தொலைக்காட்சிகள் வாய்ப்பளிக்கின்றன என்று மற்ற கட்சியினரும் விமர்சகர்களும் விமர்சித்திருக்கிறார்கள்.

இதேபோல் முன்பு திமுக முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தை மட்டும் புறக்கணிப்பது, குறிப்பிட்ட நெறியாளரைப் புறக்கணிப்பது, குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரதிநிதிகள் வருவார்களானால் புறக்கணிப்பது என்று வேறு பல கட்சிகளும் முடிவெடுத்திருக்கின்றன. `ரிபப்ளிக்’ தொலைக்காட்சியின் அர்னாட் கோஸ்வாமி அணுகுமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் விவாத அழைப்புகளை நிராகரித்த தலைவர்கள் உண்டு. சில தலைவர்கள், தங்களது பொது நிகழ்ச்சிகளுக்குச் செய்திகள் சேகரிக்கக் குறிப்பிட்ட நிறுவனத்தின் செய்தியாளர்கள் வரக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள், வந்தவர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். யார் அவர்கள், எந்த நிறுவனங்கள் என்று பட்டியலிடுவதைவிட முக்கியம், இப்படி முடிவெடுப்பது சரிதானா என்று விவாதிப்பதே.

எனது கருத்து – எந்தக் கட்சியானாலும், எந்தத் தலைவரானாலும் – இவ்வாறு முடிவெடுப்பது சரியல்ல. ஊடக நிறுவனங்கள் மீதான அவர்களது குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாம். ஆயினும், தனிப்பட்ட நலனுக்காகக் கட்சியா அல்லது பொதுநலனுக்காகக் கட்சியா, கட்சியின் மேம்பாட்டுக்காக அரசியலா அல்லது அரசியல் மேம்பாட்டுக்காகக் கட்சியா என்ற அடிப்படையிலிருந்தே இது பேசப்பட வேண்டும். பொதுநலனுக்காகவும் அரசியல் மேம்பாட்டுக்காகவும்தான் கட்சி என்றால் (அப்படித்தான் வெளியே சொல்லிக்கொள்கிறார்கள் என்றால்) எந்தவொரு பிரச்சினையானாலும் அதில் கட்சியின் கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பாகவே விவாத அழைப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கட்சியின் கொள்கை அறிவிப்பு, அரசியல் நிலைப்பாடு, உட்கட்சி மோதல் போன்றவையே கூட விவாதப் பொருளாகலாம். அதையும் தட்டாமல் ஏற்றுக்கொண்டு, உண்மையை (உண்மை என்று அந்தக் கட்சி நினைப்பதை) எடுத்துச் சொல்வதற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விவாதங்களில் பங்கெடுப்பவனாக அறிமுகமாவதற்கு முன், ஒரு தொலைக்காட்சியில் மாநில சுயாட்சி குறித்த ஒரு விவாதம் நடந்தது. அதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன் என்னையும் அரங்கத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். விவாதம் தொடங்குவதற்கு முன் தேநீரோடு ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தபோது, “இதில் தேசியக் கட்சியான உங்களுடைய கொள்கையை நியாயப்படுத்திப் பேசுவது கடினமாக இருககும்” என்றார் நெறியாளர். நான் உடனே, “இல்லையே, மாநில சுயாட்சி, நாடு தழுவிய கூட்டாட்சி என்பதுதான் எங்கள் கொள்கையும்” என்றேன். வியப்பை வெளிப்படுத்திய அவர் டிகேஆர் பக்கம் திரும்பி, “இவர் சொல்வது சரிதானா” என்று கேட்க, அவரும் “ஆமாம்” என்றார். விவாதத்தில் நெறியாளர் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கேள்வியை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. ஒன்றிய, மாநில அரசின் அதிகாரங்கள் குறித்துக் கட்சியின் கண்ணோட்டங்களை வலுவாக எடுத்துவைத்தார் டிகேஆர்.

கிடைக்கிற மணித்துளிகளில், குறுக்கீடுகளைக் கடந்து கட்சியின் நிலைப்பாடுகளைக் கூர்மையாக வெளிப்படுத்துகிற பல தலைவர்களை விவாத அரங்குகளில் சந்திக்கிறோம். அந்த வாய்ப்பை, தற்போதைய சூழல்களுக்காக ஏன் தவறவிட வேண்டும்? ஒருவேளை நெறியாளர்கள் பாகுபாட்டோடு நடத்துகிறார்கள், சம வாய்ப்பு தருவதில்லை, வேண்டுமென்றே களங்கப்படுத்தும் நோக்கத்துடன் விவாதங்களை நகர்த்துகிறார்கள் என்றால், அதையே வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி அவர்களை அம்பலப்படுத்த முடியுமே. மக்கள் நலனே மனதில் நிறைந்திருக்கிறது என்றால், இப்படிப்பட்ட கோபங்கள் உள்ளே நுழையாது. இதைப் புரிந்துகொண்டு செயல்படவில்லை என்றால், எதிர்வாதம் செய்வதற்கான நியாயங்கள் இல்லை, ஆகவேதான் நழுவுகிறார்கள் என்றே மக்கள் கருதுவார்கள்.

**நடுநிலை மாயை**

அப்படியானால், ஊடகங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையா? அவர்களின் பக்கம் தப்பே இல்லையா? நடுநிலை தவறாமல்தான் விவாதங்கள் நடத்தப்படுகின்றனவா? அப்படியெல்லாம் சான்றிதழைத் தூக்கிக்கொடுத்துவிட முடியாது. பிரச்சினை என்னவென்றால், “நடுநிலை” பற்றிய மாயைதான். பொதுவாகவே கருத்துச் சுதந்திரம் என்ற மூச்சுக்காற்றில் இயங்குகிற ஊடக உலகில், நுட்பமாகப் பார்த்தால் நடுநிலை என ஒன்று இல்லை. நடுநிலை என ஒன்று தேவையுமில்லை. அச்சு ஏடுகள் முதல் இணையத்தளங்கள் வரையில் யாரும் நடுநிலையாக இல்லை. ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் ஒரு சித்தாந்தம், அரசியல், கண்ணோட்டம் என இருக்கின்றன. அவர்களின் வெளிப்பாடுகளுக்கு அவையே வழிகாட்டியாகவும் இருக்கின்றன.

நடுநிலை என்றால், இந்தப்பக்கம் இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள், அந்தப்பக்கம் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். சம எண்ணிக்கையில் பதிவு செய்வதல்ல. நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கு வருகிறதென்றால், விசாரிக்கிற வரையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தங்களது தரப்புகளைச் சொல்ல சம வாய்ப்பு அளிக்கப்படும் (அளிக்கப்பட வேண்டும்). விசாரணை முடிந்த பிறகு, நடுநிலை என்று இருவருக்கும் சம தண்டனை என்று தீர்ப்பளிக்க முடியாது. உண்மையில் யார் பக்கம் உண்மை இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறதோ அவருக்குச் சாதகமாகவே தீர்ப்பு எழுதப்படும் (எழுதப்பட வேண்டும்).

அதே போலத்தான், ஏதேனுமொரு பிரச்சினை குறித்துச் செய்திகள், கருத்துகள் வெளியிடுகிற ஊடக நிறுவனம், தரவுகளைச் சேகரிக்கிற வரையில் நடுநிலையாக, தொடர்புள்ள அனைத்துத் தரப்பிலும் விசாரணை நடத்தும் (நடத்த வேண்டும்). அந்தப் பணி முடிந்த பிறகு செய்தியாக அல்லது காட்சித் தொகுப்பாக வெளியிடுகிறபோது, எந்தத் தரப்பில் நியாயம் இருப்பதாக நிறுவனம் முடிவுக்கு வருகிறதோ, அந்த நியாயத்தை உரக்கச் சொல்லும் (சொல்ல வேண்டும்).

அதே வேளையில், பொதுவெளி விவாதம் என வருகிறபோது, இந்தச் சித்தாந்த/அரசியல் சார்பு நிலை அப்பட்டமாகத் துருத்திக்கொண்டிராததாக, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதிலேயே கூட, ஊடகவியலாளர் தனக்கென இருக்கிற கண்ணோட்டத்தை இறுதியாக ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தலாம். இவ்வாறு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும், நடுநிலை தவறாமையையும் நுட்பமாக, ஏற்கத்தக்க வகையில் கையாளுவது ஓர் ஊடகக் கலைத்திறன். இந்தத் திறனை, ஊடகக் கோட்பாட்டுப் புரிதலிலிருந்தும், தொடர்ச்சியான பயிற்சியிலிருந்தும் வளர்த்துக்கொள்ள முடியும். வெற்றிகரமான ஊடக ஊடகவியலாளர்கள் எல்லோருமே இந்தப் புரிதலும் பயிற்சியும் உள்ளவர்கள்தான்.

**தலையங்கம் வேண்டாமா?**

அரசியல் இயக்கங்கள் நேரடியாக நடத்துகிற பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் இந்தப் பிரச்சினை இல்லை. அவர்கள் தங்கள் கொள்கை சார்ந்தே எழுதுவார்கள் என்பது வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும். எதிரணியினரும் தங்கள் மீது அந்தப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விமர்சனங்கள் வருகிறபோது இதுதான் நடுநிலையா என்று கேட்பதில்லை. நேரடிக் கட்சித் தாக்கம் இல்லாத நிறுவனங்களுக்கு இதுவொரு சவாலாகிவிடுகிறது.

அச்சு ஊடகங்களையும் அவற்றின் இணையப் பதிப்புகளையும் பொறுத்தவரையில் தலையங்கம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. ஒரு பத்திரிகை பல்வேறு நிகழ்வுப் போக்குகள் குறித்த தனது நிலைப்பாட்டைத் தலையங்கத்தில் வெளிப்படுத்திவிடும். செய்திகளில் இரு தரப்பினரின் விளக்கங்கள் இடம்பெற்றாலும், தலையங்கத்தில் பத்திரிகையின் கருத்து பதிவாகிவிடும். தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை சாராத இணைய ஊடகங்களிலும் தலையங்கம் என்ற பகுதியே கிடையாது. இதுவும், அந்த ஊடகங்கள் நடுநிலை தவறுகின்றன என்ற முணுமுணுப்புகளுக்கு காரணமாகிறது. இதையெல்லாம் கடப்பது என்ற ஆய்வோடு சவாலை எதிர்கொண்டால், பாகுபாடு என்ற குற்றச்சாட்டு எழாது, புறக்கணிப்பு தொடராது.

புறக்கணிப்பு பற்றிய தகவல்களைச் சேகரித்தபோது, சில பெரிய தொழில் நிறுவனங்களும் தொலைக்காட்சிகளைப் புறக்கணித்திருக்கின்றன என்று தெரியவந்தது. சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் சமுதாயத்தில் நஞ்சைக் கலப்பதாக இருக்கின்றன, பொய்ச் செய்திகளைப் பரப்புவதாக இட்டுக்கட்டப்படுகின்றன என்று கூறி அவர்களுக்கு விளம்பரங்கள் தருவதை அந்த நிறுவனங்கள் நிறுத்தியிருக்கின்றன. பஜாஜ், பார்லே, டாலர், அமுல் ஆகிய பெரும் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. எப்படிப்பட்ட நஞ்சு கலக்கப்பட்டது? விரிவாகத் தெரிந்துகொண்டு பேச வேண்டிய தகவல் இது. தொலைக்காட்சி விவாதங்கள் உண்மையிலேயே எந்த அளவுக்குப் பொதுச் சமூகத்தில் தாக்கம் செலுத்துவதாக இருக்கின்றன? விளக்கமாகப் புரிந்துகொண்டு விவாதிக்க வேண்டிய கேள்வி இது.

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *