பொன்னையன் தான் 17 நிமிடங்கள் பேசினார்: ஆடியோ பற்றி நாஞ்சில் கோலப்பன் அதிரடி!

politics அரசியல்

அதிமுகவை நேற்று இரவு முதல் அதிர வைத்து வரும் ஆடியோ பற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், பொன்னையனிடம் அந்த ஆடியோவில் உரையாடும் நாஞ்சில் கோலப்பன் இப்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூலை 12) இரவு வெளியிட்ட ஆடியோவில் அதிமுக பிரமுகரான நாஞ்சில் கோலப்பனிடம் மூத்த அதிமுக தலைவரான பொன்னையன் பேசிய உரையாடல் இடம்பெற்றது.

அதில், “கே.பி.முனுசாமி, தங்கமணி ஆகியோர் ஸ்டாலினை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டுவிட்டனர். எடப்பாடிக்கே கொங்கு எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் ஆதரவுதான் உள்ளது. மற்றவர்களை வேலுமணி, தங்கமணி தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள். அதிமுகவில் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள கோடீஸ்வரர்கள் முயல்கிறார்கள்” என்று பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தார்.

இந்த ஆடியோ வெளியானதும், “ அந்த ஆடியோ பதிவில் பேசியது நானல்ல. எந்த கோலப்பனிடமும் நான் பேசவில்லை” என்று பொன்னையன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆடியோவில் பொன்னையனுடன் பேசிய நாஞ்சில் கோலப்பன் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய கோலப்பன், “பொன்னையன் அதிமுக கட்சியில் இருக்கும் மூத்த தலைவர். எம்ஜிஆரோடு இருந்து அரசியல் செய்த அவரிடம் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவரை மிமிக்ரி செய்தெல்லாம் நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. எம்ஜிஆருடன் கம்பீரமாக நடந்துவந்த பொன்னையனை, இந்த குள்ளநரிகளுடன் பார்ப்பது மனதிற்கு வேதனை அளித்தது.

அதனால் அவருடன் கடந்த 9ம் தேதி இரவு 10 மணி அளவில் கிட்டத்தட்ட 17 நிமிடங்கள் போனில் பேசினேன். அப்போது அவர் மனதில் இருக்கும் குமுறலை என்னிடம் கொட்டினார். நான் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளன் என்பது அவருக்கு தெரியும். எனக்கும் அவரை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். இந்த உரையாடல் வெளியே வரவேண்டும் என்றுதான் பொன்னையன் என்னுடன் பேசினார். பொன்னையனுடன் பேசியதை நண்பர் ஒருவரோடு பகிர்ந்த நிலையில், ஆடியோ இப்போது பரவி வருகிறது. அவருடன் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை எங்கு வேண்டுமானாலும் நான் காட்ட தயார். ஆனால் ஏன் இப்போது பயப்படுகிறார் என்று தெரியவில்லை. ” என்றார்.

அதிமுகவில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் நாஞ்சில் கோலப்பன் மீது வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்தார் என கட்சி அளவில் புகார்கள் இருப்பதாக குமரி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.