திமுக ஆட்சிக்கு வராமல் தடுப்பதே தனது நோக்கம் என்றும் தன்னைப் பற்றி பேசுவர்களை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
மதுரையில் அமமுக நிர்வாகி மகேந்திரன் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு இன்று பேசினார் தினகரன். அந்தத் திருமணத்திலும் அதன் பிறகு செய்தியாளர்களிடமும் இன்றைய அதிமுக- அமமுக நிலவரம் பற்றி தெளிவாகவே பேசினார் தினகரன்.
“அமமுக பதிவு செய்யும்போதே நான் சொன்னது மாதிரி சசிகலா அதிமுகவில் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும் வகையில் சட்டப் போராட்டத்தைத் தொடருவார். அமமுக கட்சி ஜனநாயக ரீதியில் அந்த போராட்டத்தை நடத்தி, அம்மாவின் இயக்கத்தை மீட்டு, அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் உருவாக்குவதற்கே.
எங்களுக்கு குறுகிய மனப்பான்மை கிடையாது. இப்போது பேசியவர்கள் முன்பு எப்படி பேசினார்கள், இப்போது எப்படி பேசினார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். அமமுக தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எங்களது ஒரே நோக்கம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான்.
நீதிமன்றத்துக்குச் சென்றால் அடிப்படை உறுப்பினர் பறிபோகும் என்று கட்சியின் சட்டம் தெரியாமல் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அவரை நீக்கியவரை எதிர்த்துதான் அவர்கள் நீதிமன்றத்துக்குப் போனார்கள். பொதுக்குழுவுக்கு கூட்டுவதற்கு, தேர்தலை நடத்துவதற்கு, ஒருவருக்கு பதவி வழங்குவதற்கும், பறிப்பதற்கும் அதிகாரம் உள்ளவர் பொதுச் செயலாளர். அவர்தான் துணைப் பொதுச் செயலாளராக என்னை நியமித்தார். பொதுச் செயலாளர் சிறைக்குச் சென்ற நிலையில் இவர்களாகவே செப்டம்பர் 12 இல் ஒரு கூட்டத்தைக் கூட்டி பொதுக்குழு என்று சொல்லி பொதுச் செயலாளரையே நீக்கினார்கள். அந்த பொதுக்குழு செல்லாது என்றுதான் சசிகலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
பொதுச் செயலாளர் என்ற பதவியையே நீக்கிவிட்டது வேடிக்கையாக இருக்கிறது. புரட்சித் தலைவர், அம்மா கட்டிக் காத்த சட்ட விதிகளை நீக்கியது வேடிக்கையாக இருக்கிறது. சட்டப் போராட்டத்தை சசிகலா தொடர்வார். ஜனநாயக போராட்டத்தை அமமுக தொடரும் என்று கட்சியை பதிவு செய்தபோதே நான் சொன்னேன். இப்போதும் அதைத்தான் சொல்லுகிறேன். யார் தவறு செய்தவர்கள்,யார் மன்னிப்புகேட்கவேண்டியவர்கள்,யார் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.
தமிழ்நாட்டில் நிறைய கெமிக்கல் ரியாக்ஷன் உருவாகியிருக்கிறது. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் இப்போதைய எங்கள் ஒரே நோக்கம்” என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
யார் பேசியதையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்ள்வில்லை என்று தினகரன் சொல்வது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளைதான் என்று தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்களது ஒரே நோக்கம் என்று சொல்வதன் மூலம் அதிமுகவை ஒரே குடையில் ஒன்றிணைக்கவே டிடிவி விரும்புகிறார் என தெரிகிறது.
**-வேந்தன்**
�,