அமமுகவை கூட்டணிக்குள் சேர்க்கச் சொல்லி அமித் ஷா பிப்ரவரி 28 ஆம் தேதி போட்ட நிபந்தனை, அதையடுத்து அதிமுக தலைமைக் கழகத்தில் மார்ச் 1 ஆம் தேதி காலை நடந்த ஆலோசனைக் கூட்டம்… இதற்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதி மாலை சென்னை நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் பாஜக குழுவினரும், அதிமுக குழுவினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொகுதிப் பங்கீட்டை விட அமமுக விவகாரமே இதில் நீடித்தது.
மார்ச் 1ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஹோட்டல் லீலா பேலஸுக்கு அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.பி. கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய நான்குபேர் சென்றார்கள். அவர்கள் இருந்த அறைக்கு பாஜக பிரமுகர்கள் கே.டி.ராகவன், கேசவ விநாயகம் ,பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை மற்றும் மாநில தலைவர் முருகன் ஆகிய ஐந்துபேர் சென்றார்கள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடுகள் பற்றிப் பேசியதைவிட அமமுக,வை கூட்டணியில் சேர்க்கவேண்டும் என்றுதான் அழுத்தமாகப் பேசியுள்ளார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணன், “ வடமாவட்டங்களில் பாமக எப்படி முக்கியமோ அதேபோல்தான் தென்மாவட்டங்களில் அமமுக முக்கியம்”என்று கூறியுள்ளார். எல். முருகன், “அமமுகவை என்ன அதிமுகவிலா சேர்க்க சொன்னோம்? கூட்டணியில்தானே சேர்த்துக் கொள்ளப்போகிறோம். கட்சி உங்களிடம்தான் இருக்கப்போகிறது?”என்று கூறியுள்ளார்.
கொஞ்சம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்று அதிமுகவினர் கூறியபோது, “அமித் ஷா நாளை வரை நேரம் கொடுத்திருக்கிறார். சீக்கிரம் சொல்லுங்கள்”என்று பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார். அதன் பின் 8.30 மணியளவில் எல்.முருகன் முதலில் வெளியேறினார். கே.டி.ராகவனும் பொன் ராதாகிருஷ்ணனும் கீழேவந்து சில நிமிடங்கள் பேசிட்டு பிறகு புறப்பட்டார்கள்.அண்ணாமலை கேசவ விநாயகம் இருவர் தனித் தனி காரில் புறப்பட்டார்கள்.
அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் புறப்படும்போது, எஸ்கார்டு வாகனங்களுடன் சர் புர் என சில வாகனங்கள் வந்தது இறங்கும்போதுதான் தெரிந்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன், மருமகன், மகள் என குடும்பமே அங்கே வந்திருக்கிறார்கள் என்ற தகவல்.
ஹோட்டலில் இருந்த அரசியல் கட்சியினர் மற்றும் உளவுபோலீஸார் என்ன திமுக தலைவர் வருகிறார்? யாரை சந்திக்கப்போகிறார்? என ஒரே பரபரப்பானார்கள். அதன் பிறகு ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோதுதான் தெரிந்தது, ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் குடும்பத்துடன் டின்னர்க்கு வந்திருக்கிறார்கள் என்று.
**-வணங்காமுடி**
�,