}அதிமுக கூட்டணியில் சின்னம் பிரச்சினையா? வாசன்

Published On:

| By Balaji

அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையுமில்லை என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலத் தலைவராக இருந்த புலியூர் நாகராஜன் உருவப்படத் திறப்பு விழா, திருச்சியில் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புலியூர் நாகராஜனின் உருவப்படத்தைத் திறந்துவைத்து, அவரது குடும்பத்துக்குக் கட்சி சார்பில் ரூ.3 லட்சம் ஆறுதல் தொகையை ஜி.கே.வாசன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்கள் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தவறான தகவலைப் பரப்பி வருகிறது. திமுக மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் திமுகவை இனியும் தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை” என்று கூறினார்.

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவடையும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகக் குறிப்பிட்ட வாசன், “தனிச் சின்னத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் அவரவர் சின்னத்தில்தான் போட்டியிட்டனர்” என்றார்.

அவரிடம் கூட்டணி தலைமை தொடர்பாக பாஜக – அதிமுக குழப்பம் இருப்பதாகத் தெரிகிறதே எனக் கேள்வி எழுப்ப, “குழப்பம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், கூட்டணியில் முதன்மையான கட்சியாக அதிமுகதான் உள்ளது. இதில், பாஜகவுக்கே மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை” என்றவர், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தாம் முழு மனதுடன் வரவேற்பதாகவும் கட்சி நலன் மட்டுமல்லாமல் தமிழக நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது என்றும் தெரிவித்தார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share