முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பதவியேற்றார். முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இன்று (பிப்ரவரி 16) நான்காம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.
அவருக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடர வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்னும் ஓர் ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டுகாலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தேமுதிக சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதுபோலவே வாசன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எனினும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தரப்பிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனோ, மாநிலத் தலைவரின் பணிகளை கவனித்து வரும் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகமோ முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதுபோல தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை. இது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
�,