ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை மற்றும் உளுந்து வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஆய்வுப் பணிகளுக்காக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விழுப்புரம் மாவட்டத்துக்குச் சென்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் காணை குப்பம் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பெரும்பாக்கம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் ஆய்வு நடத்தினார்.
அதுபோன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரேஷன் கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும். திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகள் 110 விதியின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
அதுபோன்று அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து புத்தகம் வெளியிடப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உளுந்து ஆகியவை வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம்.
அதில் எந்த மாற்றமும் இல்லை. இனி கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும்.
அறநிலையத்துறைக்குச் சொந்தமான காலியிடத்தில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்று அறிவித்தோம். இந்த திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை” என்றார்.
-பிரியா