சிபிஎம்-ஐ ஆதரித்து சிறப்புத் தோற்றத்தில் ரோகிணி

politics

ஆணோ பெண்ணோ திரைப்பட நடிகர்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் உள்ள உறவை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. பெண் நடிகர்களில் 84 வயதான வைஜயந்தி மாலா பாலி முதல் பெரிதாக சோபிக்காத காயத்ரி ரகுராம்வரை, தமிழ்நாட்டு அரசியல்வாதி நடிக பிரபலங்களின் பட்டியல் நீளும். ஆனாலும் இவர்கள் எல்லாரும் பதவி என்கிற கணக்கில்தான் வரவு வைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

கட்சி, தேர்தல் மூலம் வரும் பதவிகளைத் தாண்டியும் அரசியல் களத்தில் குறிப்பாக எளிய மக்களுக்கான களங்களில் செயல்படுவோர் மிகமிகக் குறைவு. அவர்களில் சமகாலத்தில் முன்னணியில் இருப்பவர், ரோகிணி.

இவர், பரவலாக கவனம்பெற்றது, முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியிடம், மரபணுமாற்றப்படும் பயிர்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தபோதுதான். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. அப்போது, அதை அனுமதிக்கக்கூடாது என பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு என்கிற இயக்கத்தின் சார்பில், அன்றைய முதலமைச்சரான கருணாநிதியிடம் குழுவாகச் சென்று கோரிக்கை மனுவை அளித்தவர், ரோகிணி.

அதைத் தொடர்ந்து நஞ்சில்லாத உணவு, இயற்கை விவசாயம், பயிர்ப் பாதுகாப்பு, கலை, பண்பாட்டு தளங்களில் ஏற்படும் அநீதிகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் போன்றவற்றுக்கெதிரான செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டினார். கடந்த ஆண்டில் நிகழ்த்தப்பட்ட பெரும் மனிதப் பேரவலமான புலம்பெயர்ந்த தொழிலாளர் இடப்பெயர்வில், தன்னாலான உதவிகளைச் செய்ய கடுங்கோடை வெயிலிலும் சாலைசாலையாகப் போய் களத்தில் வேலைசெய்தார், ரோகிணி.

அரசியல் களத்தில் இவரின் செயல்பாடுகள் சிபிஎம் கட்சி சார்ந்ததாக அதிகம் இருந்தது. அந்தக் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற மக்கள்திரள் அமைப்புகளுடன் ஒட்ட ஆரம்பித்தார். தொடர்ச்சியாக, அக்கட்சிசார்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராகவும் ஆனார். இந்தத் தேர்தலில், சிபிஎம் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார், ரோகிணி.

கடந்த மாதம் 27ஆம் தேதியன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் நாகை மாலியை ஆதரித்து, பிரச்சாரத்தைத் தொடங்கினார். 28 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சின்னதுரைக்கும் , ஏப்ரல் முதல் தேதி திண்டுக்கல் வேட்பாளர் பாண்டியை ஆதரித்தும், 2ஆம் தேதி மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் பொன்னுத்தாய்க்கு வாக்குகேட்டும், 3ஆம் தேதி கோவில்பட்டியில் போட்டியிடும் சீனிவாசனை ஆதரித்தும் ரோகிணி ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்.

ஆம், மற்ற திரைப் பிரபலங்களைப் போல பெயருக்கு ஏதாவது ஓர் இடத்தில் பெரும் பேரணியிலோ பொதுக்கூட்டத்திலோ பேசிவிட்டு நகர்வதாக இல்லை, இவரின் பிரச்சாரம். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 15 ஊர்களுக்காவது சென்று பேசிவிடுகிறார்.

திரைப் பிரபலம் என்பதையொட்டி காண்பிக்கப்படும் சுற்றுவட்ட அலம்பல், பகட்டு ஆரவாரம் எதுவும் இல்லாமல், நடப்பு அரசியல் நிலவரத்தை, மக்களிடம் அவர்களுடன் உரையாடுவதைப் போல எடுத்துவைக்கிறார், ரோகிணி.

விவசாய சட்டங்கள், புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, பொள்ளாச்சி பாலின வன்முறை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என மக்களுக்கான பிரச்னைகளைப் பற்றி, அரசியல்வாதிகளைவிடவும் சிறப்பாகவே இவர் பேசுவது கேட்போரைக் கவர்ந்திழுக்கிறது. குறிப்பாக, இவர் செல்லும் கிராமங்களில் இவர் சொல்லும் வார்த்தைகளை பெண்கள் கணிசமாக கவனிக்கின்றனர்.

சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்த ரோகிணியின் பிரச்சாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான வெளிப்படையான விமர்சனங்கள் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன. மக்களுக்கு எதிரான பாஜக, அதிமுக கூட்டணியைத் தூக்கி எறியுங்கள் என பல காரணங்களைப் பட்டியலிட்டுப் பேசுகிறார், ரோகிணி. மதுரையில் இவர் பேசும்போது, பிரதமர் மோடி மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துசென்றதையும் ஒரு பிடி பிடித்தார். மக்களுக்கு பிரச்னைகளைத் தந்துவிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தால் சரியாகிவிடுமா எனச் சாடினார், ரோகிணி.

எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த இவரின் பிரச்சாரத்தில், திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா ’ஏழரை’யைக் கூட்டியதாக கோபத்தில் இருக்கிறார்கள். சிபிஎம் தோழர்கள். அங்கு போட்டியிடும் பொன்னுத்தாய்க்கு ஆதரவாக அவருடன் சேர்ந்து வேனில் ரோகிணி பேசிக்கொண்டிருந்தபோது, விதிகளுக்கு மாறாக, நிலையூர் என்ற இடத்தில் ராஜன் செல்லப்பாவும் வந்தார்.

ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்பது நீண்ட கால மரபு. முன்னரே அனுமதிபெற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாய் பாதி பிரச்சாரத்தில் இருந்தபோது, ராஜன் செல்லப்பா வந்தது எந்தக் கட்சிக்காரரும் ஏற்கமுடியாத ஒன்று.

இரு தரப்புக்கும் இதையொட்டி வாக்குவாதம் ஆகி, போலீஸ் வந்து ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக, சிபிஎம் வேட்பாளரை கிளப்புவதிலேயே ஆர்வம் காட்டினார்கள். அப்படியே செய்யவும் வைத்தனர்.

இந்த அனுபவம், ரோகிணிக்கு புதிதாக இருந்திருக்கவேண்டும்.

ஆனாலும் அவர் அடுத்ததாக கோவில்பட்டியில் போட்டியிடும் சீனிவாசனுக்கு வாக்கு கேட்கும் கடமையில் கண்ணாக தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

**- இளமுருகு**

**படங்கள் – நன்றி – தீக்கதிர்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.