பதவியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சில ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். சமீபத்தில் பாஜக அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக எதிர்த்த நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார் குஷ்பு. இதனால் அவர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தகவல் உலா வரத் தொடங்கியது.
ஆனால், ஒரு ட்வீட்டுக்கு இரண்டு ரூபாய் பெற்றுக்கொண்டு தான் பாஜகவில் இணையப்போவதாக வதந்தி பரப்புவதாக விளக்கம் அளித்திருந்தார் குஷ்பு. எனினும், குஷ்பு இன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வதாக ஒரு தகவல் நேற்று வெளிவந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு நீக்கப்படுவதாக செய்தித் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் பிரணவ் ஷா இன்று (அக்டோபர் 12) அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் காங்கிரஸிலிருந்து தான் விலகிக்கொள்வதாக சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
“காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நாட்டு மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை அளித்ததற்கு நன்றி. நான் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் காங்கிரஸ் கட்சிக்காக பல தளங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயல்பட்டதில் பெருமையடைகிறேன். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இக்கட்டான கால கட்டத்தில் காங்கிரஸ் இருந்தபோது கட்சிக்கு வந்தேன். நான் காங்கிரஸுக்கு வந்தது பணத்திற்காகவோ, ஆதாயத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
கட்சியின் உயர்பதவியில் இருக்கும் கள நிலவரத்தை அறியாத தலைவர்கள், மக்களால் அங்கீகரிக்கப்படாத சிலர் என்னைப்போன்ற கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்களை அடக்கி ஒடுக்கினர் என்ற அவர், “நீண்ட யோசனைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன். ஆகவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும், கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி” என்றும் கூறியுள்ளார்.
**எழில்**�,