|நாடு முன்னேற மோடி தேவை: பாஜகவில் இணைந்த குஷ்பு

Published On:

| By Balaji

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, பாஜகவில் சேர நேற்று மாலை டெல்லி சென்றார். அடுத்த அதிரடியாக செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்ட குஷ்பு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் டெல்லியிலுள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (அக்டோபர் 12) சென்ற குஷ்பு, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது, பாஜக தமிழ்நாடு தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுபோலவே, ஊடகம் மற்றும் யூ டியூப் சேனல்களில் நேர்காணல்கள் செய்துவந்த மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் சேர்ந்தார்.

அப்போது பேசிய எல்.முருகன், “மகளிர், பட்டியலினத்தோர், தொழிலதிபர்கள் என அனைவரும் பாஜகவில் சேர்ந்துவருகிறார்கள். நேர்மையான அரசாங்கத்தை நடத்தும் நரேந்திர மோடியின் ஆட்சி தமிழகத்திலும் வர வேண்டும் என்று நினைப்பதுதான் அதற்கு காரணம். அந்த வகையில் குஷ்பு இணைந்துள்ளதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

இறுதியாக குஷ்பு பேசுகையில், “மிக்க மகிழ்ச்சியோடு பாஜகவில் இணைந்திருக்கிறேன். 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். எது மக்களுக்கு நல்லது, எது நாட்டுக்கு நல்லது என்பதை உணர்ந்து தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன். நாடு முன்னேற வேண்டுமென்றால் பிரதமர் மோடி போன்ற ஒரு தலைவர் தேவை” என்று தெளிவுபடுத்தினார்.

பின்னர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் குஷ்பு. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜகவை பல விஷயங்களில் தாக்கிப்பேசியுள்ளேன். ஆனால், இதுவரையில் பாஜக தலைவர்கள் யார் மீதும் ஊழல் புகார்கள் எதுவுமில்லை. 128 கோடி மக்கள் உண்மையில் 1 மனிதனை நம்புகிறார்கள். அதுதான் எங்கள் பிரதமர், அவர் முற்றிலும் சரியானதைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

An eminent personality joins BJP in presence of Shri @Murugan_TNBJP and Shri @CTRavi_BJP at BJP headquarters in New Delhi. #JoinBJP https://t.co/5eNfAsmt9P

— BJP (@BJP4India) October 12, 2020

மேலும், “கட்சியில் மாற்றம் இருக்கலாம், ஆனால் கொள்கையில் மாற்றம் இருக்கக் கூடாது. என்னை ஒரு அரசியல்வாதி என்று சொல்வதை விட சமூக செயற்பாட்டாளர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். மாற்றம் என்பது மனிதரின் இயல்பு. எதிர்க்கட்சியாக இருந்ததால் கட்டாய சூழலில் பாஜகவை விமர்சித்தேன். காங்கிரஸ் தலைவர் ஒரு கருத்தைக் கூறும்போது அதைத்தானே நான் செய்ய முடியும்” எனவும் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share