அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தொகுதி பங்கீடு முடியாத நிலையில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பாக நடிகை கௌதமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தேர்தல் துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவித்தது விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி போட துடித்து கொண்டிருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தற்போது ராஜபாளையத்தில் போட்டியிடுவது சந்தேகமாகியுள்ளது .காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் அவரவர்கள் போட்டியிட்ட தொகுதியில் தான் இத்தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று கட்டளையிட்டதுதான்.
விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவின் எஃகு கோட்டையான ராஜபாளையத்தை கடந்த தேர்தலில் திமுக கைப்பற்றியது. இழந்த தொகுதியை மீண்டும் தன்வசமாக்க அதிமுக முனைப்பு காட்டி வரும் நிலையில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் நடிகை கெளதமிக்கு வாழ்த்துகள் என அக்கட்சியின் தோ்தல் இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி இங்கு சனிக் கிழமை நடந்த கூட்டத்தில் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகா் மாவட்ட ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக மேலிட பாா்வையாளரும் அக்கட்சியின் தோ்தல் இணைப் பொறுப்பாளருமான சுதாகா் ரெட்டி தலைமை வகித்தாா். கூட்டத்தில் பேசிய சுதாகா் ரெட்டி ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் நடிகை கௌதமி வெற்றிபெற வாழ்த்துகள். அனைவரும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றாா். பாஜக-அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை முடிவடையாத நிலையில் நடிகை கெளதமியை வேட்பாளராக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அறிவித்துள்ளது அதிமுக வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாளை தரிசிக்க சகோதரியுடன் வந்த நடிகை கௌதமியுடன் இது குறித்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,
என்னை கட்சி மேலிடம் ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமித்ததால் நான் இங்கு முகாமிட்டு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன்.நான் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதை பாஜக தலைமைதான் முடிவுசெய்யும்.என்றார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுடனே தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.பாஜக உடனான கூட்டணி தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை யில் தான் உள்ளது. நேற்று இரவுகூட சென்னையில் அமித்ஷாவுடன் முதல்வர் , துணைமுதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இரு தரப்பினரும் முடிவை அறிவிக்காத நிலையில் ராஜபாளையத்தில் பாஜக வேட்பாளராக நடிகை கௌதமி போட்டியிடுவார் என சுதாகர் ரெட்டி தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்றே மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர் கே.டி.ஆர்.ஒன்று நினைத்தார், ஆனால் நடப்பது நேர்மாறாக உள்ளது. அமைச்சர் ராஜபாளையத்தில் போட்டியிட்டு தனது எதிரியான சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனை ஓரம்கட்ட சாத்தூரை பாஜகவுக்கு தாரை வார்க்க முடிவு செய்திருந்தார்.இப்போது கேடிஆர் ராஜையில் போட்டியிடுவாரா ? என்று மில்லியன் டாலர் கேள்வி வரும் நிலையில் நடிகை கௌதமி ராஜபாளையத்தில் தங்கி குறிவைத்து, கொக்காய் அறிவிப்புக்கு காத்திருக்கிறார் என்கின்றனர் கேடிஆர்-ஆல் ஓரங்கட்டப்பட்ட அதிமுகவினர்.
**-சக்தி பரமசிவன்**
�,”