எஸ்.ஏ.சி.-விஜய்: இன்றைய வழக்கு- நாளைய தீர்ப்பு! மினி தொடர்-1

politics

வேந்தன்

என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான ரசிகர்களே என்ற விளிப்பின் மூலமும், கன்னத்தைக் குழைத்துப் பார்க்கும் கனிவுப் பார்வை மூலமும் கோடானு கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்தவர் விஜய்.

விஜய்யை ரசிப்பவர்களில் இப்போதைய 90 கிட்ஸ் பலருக்கும் விஜய்க்குப் பின்னால் இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் என்ற ஆளுமை பற்றி தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும், விஜய்யின் அப்பா என்று மட்டுமே எஸ்.ஏ. சந்திரசேகரை வரையறுத்துவிட முடியாது. அதேபோல, எஸ்.ஏ.சி.யின் மகன் என்று மட்டுமே விஜய்யின் வரையறையையும் வரம்புக்கு உட்படுத்த முடியாது.

இந்த பாசப் போராட்டம்தான் பதுங்கிக் கிடந்து பகீரெனப் பாயும் எரிமலை போல, இப்போது வெடித்துள்ளது

நவம்பர் 5 ஆம் தேதி எஸ்.ஏ. சந்திரசேகர், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்த தகவல் வெளியானது. இதற்கு ஒரு சில மணி நேரங்களிலேயே விஜய் கடுமையான மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

விஜய் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டபோதே அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசப்பட்டது. ஆனபோதும் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற வகையில் தமிழ் சினிமாவில் தனக்கிருக்கும் வர்த்தக வசந்த காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள விஜய் தவறவில்லை. அதேநேரம் ஒவ்வொரு படத்திலும் ஒரு மெசேஜ் என்ற சமூக வாசனையும் விஜய்யிடம் வீசத் தொடங்கியது.

இலவசங்களுக்கு எதிரான பிரச்சாரம், ஊழலுக்கு எதிராக இளைஞர்களின் சர்க்கார் அமைப்பது, ஆளப்போறான் தமிழன் என்று ஜல்லிக்கட்டு அரசியல், ஜிஎஸ்டி வரி விமர்சனம் என்று கடந்த சில ஆண்டுகளில் சினிமாவில் பணம் சம்பாதித்தது போலவே அரசியலிலும் விமர்சனங்களை சம்பாதித்து, அதன் மூலம் அரசியலில் தனக்கான இடம் ஒன்று உருவாகிறது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார் விஜய்.

இந்த நிலையில்தான் விஜய்- எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இடையே மோதல் மூண்டிருக்கிறது. விஜய் இப்போது கோடிகளில் நிற்கும் நாயகன். அவரைப் பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து இப்போது இருக்கும் உயரத்துக்கான அஸ்திவாரத்தைத் தோண்டி அதில் தன் வியர்வையை விதைத்திருக்கிறவர் எஸ்.ஏ.சி.

**எஸ்.ஏ.சந்திரசேகர்… இவரிடம் நெருக்கமாகப் பழகிய யாரும் சட்டென வைத்துவிடும் பெயர், ’எமோஷனல் சந்திரசேகர்’.** தன் முன்னால் யார் இருக்கிறார்கள், அவர்களால் தனக்கு ஏதும் ஆக வேண்டியிருக்கிறதா, அவர்களின் கோபத்தால் நமக்கு ஏதேனும் பிரச்சினை வருமா என்று எந்தத் தயக்கத்துக்கும் நாற்காலி போடாமல்… அடி மனதில் பட்டதை, கலப்படமும், ஒப்பனையும், அரிதாரமும் இல்லாமல் நுனி நாக்கு வரை கொண்டு வந்து பேசிவிடும் ஒரு அப்பட்டமான மனிதன்தான் எஸ்.ஏ. சந்திரசேகர்.

’ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்பது ஆக்சுவலாக விஜய்க்கான வசனம் அல்ல. அது எஸ்.ஏ. சந்திரசேகருக்கே பொருந்தும் வசனம்.

1981 ஆம் தேதி சமூகக் கோபம் கொண்ட ஒரு தெறி இளைஞனாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் எஸ்.ஏ. சந்திரசேகர். அவரது முதல் படம், ‘சட்டம் ஒரு இருட்டறை’. அண்ணாவின் வார்த்தைகளையே தலைப்பாக்கி வைத்த அந்தப் படம் தமிழ் சினிமாவிலும் தமிழ் சமூகத்திலும் பேசப்பட்ட படம். எஸ்.ஏ. சந்திரசேகரின் அடுத்தடுத்த படங்களின் தலைப்பை நாம் திரும்பப் பார்த்தாலே அவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும்.

நெஞ்சிலே துணிவிருந்தால், ஜாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது இப்படி சட்டம், நீதி, சமூகம் என தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருந்தார் எஸ்.ஏ.சி.

ரத்தம் சத்தம் போடும் வயது என சொல்லப்படும் பருவத்தில் தொடங்கிய இந்த சமூகக் கோபத்துடன் கூடிய சினிமா பயணம் எஸ்.ஏ. சந்திரசேகரின் நடுத்தர வயதுகளிலும் நீடித்து, இப்போதும் தொடர்கிறது.

அதே நேரம் தன் மகன் ஜோசப் விஜய் பிறந்து, வளர்ந்து லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், அந்த எமோஷனல் சந்திரசேகருக்குள் அப்பா என்ற பொறுப்பு எட்டிப் பார்த்தது.

வீட்டைத் தாண்டி சினிமா என்னும் பொதுவாழ்வில் எஸ்.ஏ.சி, விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து தொடங்கிய அந்த பயணம் இன்று ஏன் இப்படி முரண்பட்ட திசைகளில் மூர்க்கமாய் பாய்கிறது?

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இன்று நடக்கும் இந்த வழக்கின் நாளைய தீர்ப்பு என்ன? இதற்கு நேற்றைய நிகழ்வுகளை நிரல்படுத்திப் பார்க்க வேண்டும்.

மின்னம்பலத்தில் ஒரு தொடராகவே காண்போம்.

**(நாளை தொடரும்)**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.