ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடி! சரத்பவாருக்கு செக்!

politics அரசியல்

மகாராஷ்டிரா அரசியலில் நடைபெற்றிருக்கும் ஆட்சி மாற்றத்தால், பழைய கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எல்லாம் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது. தற்போது அமைந்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பி.ஜே.பி. கூட்டணியில் அமைந்திருக்கும் அரசே அதற்குக் காரணம். “மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசானது எதிர்க்கட்சிகளை வீழ்த்த எந்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும்” என்பதுதான் பல அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

அந்த வகையில், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பி.ஜே.பி. அதன் மூத்த தலைவர்களையும் முக்கியப் புள்ளிகளையும் தம் பக்கம் இழுத்துவருகிறது. அதற்குச் சமீபத்திய உதாரணம் பஞ்சாப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சிக்குத் தாவியது. மேலும் குஜராத்தில் ஹர்திக் பட்டேலும் பி.ஜே.பியில் இணைந்தார். தற்போதுகூட காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சிய அம்ரீந்தர் சிங், பி.ஜே.பி.யில் இணையயுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவர், அக்கட்சியிலிருந்து விலகி, பஞ்சாப் லோக் காங்கிரஸை ஆரம்பித்துள்ளார் என்பதும், தற்போது அவர் அறுவைச்சிகிச்சைக்காக லண்டனில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புதிய அரசு, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவாருக்கு வருமான வரித்துறை மூலம் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அதுவும் பழைய ஆண்டுக் கணக்குகளையும் சேர்த்து அனுப்பியுள்ளது. 2004, 2009, 2014 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தேர்தல் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுக்கள் குறித்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சரத்பவார் தனது ட்விட்டர் பதிவில், “மத்திய அரசின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து கொண்ட நபர்களுக்கு வருமான வரித் துறை கருவியாகச் செயல்படுகிறது. எனக்கும் வருமான வரித்துறை இதுபோன்று ஒரு காதல் கடிதம் அனுப்பியுள்ளது. 2004ஆம் ஆண்டு அன்றைய மக்களவைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவை வைத்து இப்போது கேள்வி கேட்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதற்கு முன்பு சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இது தற்போது கவிழ்க்கப்பட்டுத்தான் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனாலேயே அங்கு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதற்கு சரத் பவார் முதல் ஆளாய் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

  • ஜெ.பிரகாஷ்
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.