[கடவுளின் செயல்: நிர்மலா சீதாராமன்

Published On:

| By Balaji

நாடு முழுவதும் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 41 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இணைய வழியாக தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை 2.35 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுடன் உரையாடிய சீதாராமன், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்ற ‘கடவுளின் செயலால்’ இந்த நிதியாண்டில் பொருளாதாரம் சுருங்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ வருடாந்திர ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தேவை சுமார் ரூ .3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் செஸ் வசூல் சுமார் 65,000 கோடி ரூபாய் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் எங்களுக்கு ஆண்டு இழப்பீட்டு இடைவெளி ரூ .2.35 லட்சம் கோடி ஆகும் என்று வருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே கூறினார்.

ஏப்ரல் முதல் ஜூலை காலாண்டில் மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ .1.5 லட்சம் கோடி என்று அவர் மேலும் கூறினார். “ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜிஎஸ்டி சேகரிப்பு எதுவும் இல்லை என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் பாண்டே கூறினார். ஐந்து மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தத்தமது மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர்.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசுகள் கடன் பெறலாம் மாநில அரசுகளுக்கு உதவ ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடியால் பல மாதங்கள் நாடு முழுவதும் முடக்கத்தில் உள்ளதால், பல மாநிலங்களும் தங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கியைத் தருமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன. தமிழக முதல்வர் கூட இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share